பிரமிக்க வைத்த சீனா!

எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நண்பர்களுடன் சீனாவிற்கான முதல் பயணம் ஆரம்பமானது. சீனா குறித்து பல எதிர்மறையான செய்திகளும் விமர்சனங்களும் கேட்டும் படித்தும் இருந்ததால், அதனை நேரில் அறிந்துகொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு மட்டும் இருந்தது.

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் இளைஞரின் ஊடக கருத்தரங்கிற்காக இலங்கை சார்பாக எட்டு பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். 2023 ஒக்டோபர் மாதம் இந்த கருததரங்கு பெய்ஜிங் நகரில் ஆரம்பமானது. அதன்பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க பல இடங்களுக்கு செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. இதில் மிக முக்கியமாக சீனாவின் ரோட் அன்ட் பெல்ட் திட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், சீனா கம்யுனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையின் சர்வதேச விவகாரங்களைக் கையாளும் ஆசிரியர் விரிவுகளை வழங்கியிருந்தார்.

இதன்போது சீனாவின் பத்திரிகை கலாச்சாரம் குறித்து விரிவாக பேசியிருந்தார். மேற்குல நாடுகள் சீனாவிற்கு எதிராக மேற்கொள்ளும் பரப்புரைகள் குறித்து பேசியிருந்தார். இதன்போது சீனாவில் உள்ள பத்திரிகை சுதந்திரம் குறித்தும், மக்களின் கருத்தறியும் சுதந்திரம் குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது.

”எது சுதந்திரம், எது ஜனநாயகம் என்பதை ஒரு நாடு தீர்மானிக்கும். ஒவ்வொரு நாட்டிற்கும் அது தனித்துவமானது. சீனாவிற்கும் அது தனித்துவமானது. சீன மக்களுக்குத் தேவையானதை சீனா அரசாங்கம் செய்துகொடுக்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், அனைத்து மக்களுக்கு உணவளிப்பதையும் சீனா முதன்மையாகக் கொண்டுள்ளது. இதனை சீனா குறையின்றி செய்து வருகிறது” என விளக்கமளித்தார். இதன்போது சீனாவின் கலாச்சாரம், சீனாவில் முன்னெடுக்கப்படும் சமூக வலைத்தள உபயோகம் குறித்தும் பேசப்பட்டது.

கொவிட் பெருந்தொற்று சீனாவில் திட்டமிட்டு பரப்பப்பட்ட ஒரு வைரஸ் என்ற தகவல் பொய்யானது என்பதை அந்த ஆசிரியர் இடித்துரைத்திருந்தார். மேற்குலக நாடுகளின் ஊடகப் பிரசாரமாகவே இந்தச் செய்தி பரப்பப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். கொவிட் பெருந்தொற்றினால் சீனா எதிர்கொண்ட சவால்களும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையும் அந்த பத்திரிகை ஆசிரியர் விபரித்திருந்தார். சீனாவே திட்டமிட்டுப் பரப்பியிருந்தால் அதில் சீனா ஏன் அதில் மாடிக்கொண்டது என்ற எதிர்கேள்வியை முன்வைத்தார். உலக அளவில் சீனாவின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

 

சீன மக்கள் சுயநலமிக்கவர்களா?

சீன மக்கள் சுயநலமானவர்கள். ஏமாற்றுக் காரர்கள் என்ற பொதுவான கருத்து இருந்தது. ஆனால், அங்குள்ள சீன மக்களிடம் பழக கிடைத்ததில் இந்தக் கருத்து பொய் என்பது தெரியவந்தது. எம்மைச் சுற்றியிருந்த, அல்லது இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்த தரப்பினர் இதனை பொய் என்பதை அவர்களின் பராமரிப்பும், அணுகுமுறையும் காட்டியது. எம்மை அழைத்துவந்து அவர்கள் இப்படி நடந்துகொள்வதில் ஆச்சரியம் இல்லை என்று எமது பயணத்தில் முதல்தடவையாக இணைந்துகொண்ட நண்பன் ஒருவர் இரண்டு நாட்களின் பின்னர் தெரிவித்தார். ஆனால், ஊர் பார்ப்பதற்காக வீதிகளில் நடக்கும் போது, அங்கு சந்தித்த, கண்ட மக்களும் இதனைப் பொய் என்று நிருபித்தனர். ஒருமுறை பெய்ஜிங்கில் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியைத் தவறவிட்டோம். வழி நெடுகிலும் மக்களிடம் உதவி கேட்டோம். அவர்களின் அனுமுறையும், அவர்கள் நடந்துகொண்ட விதமும் சீன மக்கள் மீதான பொய்யான விம்பத்தை உடைத்தது. மிகவும் மென்மையானவர்கள். முதலில் கதைக்க முற்படும் போது கொஞ்சம் கூச்ச சுபாவம் இருந்தது உண்மையே. அவர்களில் அநேகருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. ஆனால் அவர்கள் தொழில்நுட்பத்தை அறிந்துவைத்துள்ளார்கள். உடனடியாக தொலைபேசியை அடுத்து, நாம் கூறுவதை பதிவு செய்து, அதனை சீன மொழியில் மொழிபெயர்ந்து, அதற்கு பதிலை சீன மொழியில் வழங்கி, ஆங்கிலத்தில் தெரிவித்தார்கள். உதவி மனப்பான்மை இல்லையெனில், ”எமக்குத் தெரியாது” என்று விலகிச் சென்றிருக்க முடியும். ஆனால் சீனர்கள் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. ஆனால் இளைஞர்களில் சிலர் கொஞ்சம் ஆங்கிலமும் தெரிந்துவைத்திருக்கிறார்கள். அவர்களின் நட்பு ரீதியான பேச்சும், மென்மையான குணமும் எம்மை ஆச்சரியப்படுத்தியது.

சீன உணவு கலாச்சாரம்

உணவு கலாச்சாரத்தில் சீனாவிற்கு தனியிடம் உள்ளது. .சீனாவிற்கு செல்லும்போது, பல்லி முதல் பாம்புவரை உண்ண வேண்டியிருக்கும் என்று நண்பர்கள் கேலி செய்திருந்தார்கள். ஆனால், அந்த உணவுக் கலாச்சாரத்தை தேடிச் செல்ல வேண்டியிருந்தது. கிராமத்துச் சந்தைகளில் உணவு அங்காடிகளில் ஒரு சில இடங்களில் மட்டுமே இவ்வாறான உணவுகளைக் காணக் கூடியதாக இருந்தது. இதனைத் தவிர, மிகவும் ஆரோக்கியமான அல்லது பைபர் நிறைந்த உணவு வகைகளை ருசி பார்க்க முடிந்தது. சீனாவின் உணவுக் கலாச்சாரத்தில் பன்றி இறைச்சி அதிக இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால், எம்மிடம் அதனைத் தவிர்க்க வேண்டுமாயின், தனியான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இதில் எம்மை அழைத்துச் சென்ற இடங்களும், அங்கு பரிமாறப்பட்ட உணவுகளும் இன்னும் இனிமையான அனுபவமாக இருக்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்

சீனாவின் கங்சு மாகாணத்தில் உள்ள பாலைவனமும், சந்திரனைப் போல் உள்ள வற்றாத ஜீவ நதியும்.

பயணப்படு அதிகமாக அறிய முடியும் என்ற முதுமொழி எப்போதும் பிடிக்கும். அந்த வகையில் இரண்டு வாரம் பயணப்பட்ட இடங்களும், பெற்ற அனுபவங்களும் சீனாவை அதிகமாக கற்றுக்கொடுத்தது. சீனாவின் பெருஞ்சுவர் உலகம் அதிசயம் என்பது தெரிந்திருந்தாலும், அதன் நிர்மாணிப்புப் பணிகளை நேரில் சென்று பார்த்தபோது பிரமிக்க வைத்தது. இதனைத் தவிர சீனாவின் பட்டுப்பாதையும், சீனா பல நூற்றாண்டுகளாக மேற்கொண்டுவந்த வர்த்தகங்களும் சீனாவின் சிறப்புகளை சொல்லித்தந்தது. சூரிய ஒளியில் மின்சாரத்தைத் தயாரிக்கும் மிகப் பிரமாண்டமான, அதிநவீன தொழில்நுடம்பத்தில் இயங்கும் பசுமை மின்சக்தி உற்பத்தி நிலையமொன்றுக்கு அழைத்துச்செல்லப்பட்டோம். உலகில் மிகப் பெரிய சூரிய சக்தியில் மின் உற்பத்தி செய்யும் இடமாக சொல்லப்பட்டது. பல்லாயிரம் ஏக்கர் பரந்து, விரிந்திருந்தது அந்த இடம். சுற்றிவர பிரமாண்டமான முகம்பார்க்கும் கண்ணாடிகள். சூரியனின் ஒளியை உள்வாங்கி, ஒரு கோபுரத்தில் சேமிக்க பிரதிபலிக்கிறது. புவி சுற்றும் விசைக்கேற்ப அந்தக் கண்ணாடிகளும் தன்னியக்கத்தில் தம்மை சரிசெய்துகொண்டு காலை முதல் மாலை வரை சூரிய ஒளியை உள்வாங்குகிறது. சூரிய ஒளி கண்ணாடிகளில் பட்டு, கோபுரத்தில் பிரதிபலிக்கும் போது அந்தக் கோபுரம் இன்னுமொரு சூரியனைப் போல் மிளிர்கிறது. உண்மைதான் அதற்கு மனித சூரியன் என்ற பெயரிலேயே அந்தக் கோபுரத்தை எமக்கு அறிமுகம் செய்துவைத்திருந்தனர்.

கலை கலாச்சாரம்

கலை, கலாச்சாரம் என்பது ஒரு இனத்தின் அடையாளமாக இருக்கிறது. அந்த அடையாளத்தை சீனா அவ்வாறே பேணி வருகிறது. குறிப்பாக மேடை நாடகங்கள், சினிமா, சினிமாவின் நவீனத்துவம் ஆகியவை புருவம் உயர்த்த வைத்தது. சீனாவில் பிரபல்யமான மேடை நாடகம் ஒன்றைப் பார்ப்பதற்கு அழைக்கப்பட்டிருந்தோம். அதில் இருந்த கலை, கலாச்சார அம்சங்கள் மெய்சிலிர்க்க வைத்தது. அந்த மேடை நாடகத்தில் கையாளப்பட்ட தொழில்நுட்பம் பிரமிக்க வைத்தது. சீனா தனக்கான அடையாளத்தை தணித்துவமாக இன்னும் பேணி வருகிறது என்பதை நிருபித்தது.

சீனாவின் பொருட்களும், உற்பத்திகளும் மட்டமானவையா?

சீனாவின் பொருட்கள் மட்டமானவை என்ற ஒரு பொதுவான கருத்து இருக்கிறது. இதுகுறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் வெகுவாக இருந்தது. ஆனால் சீனாவில் பயணப்பட்டபோது அதனைக் காண முடியவில்லை. மிகவும் தரம்வாய்ந்த பொருட்கள் மக்களுக்கு கிடைக்கிறது. ஆனால் எங்கிருந்து, எவ்வாறு இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது என்பதை அறிய ஆவல் இருந்தது. உண்மையில் சீனாவின் பொருட்களும், உற்பத்திகளும் மலிவான விலையில் எமது நாடுகளில் நிறையவே கிடைக்கின்றன. மலிவான பொருட்கள் மட்டமானவையா இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் சீனாவின் சந்தைகளில் இதனைப் பார்க்க முடியவில்லை. இதுகுறிந்து எமக்கு விரிவுரையாளர் வழங்கிய ஒரு வளவலாளரிடம் கேள்வியெழுப்பினோம். அதற்கான விளக்கத்தை அவர் தந்தார்.

”ஒரு பொருள் சந்தைக்கு வருகிறது. குறிப்பாக ஒரு சிறந்த காலணி என்று வைத்துக் கொள்வோம். அதன் விலை 100 டொலர்களாக இருக்கும். ஆனால், உலகின் வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து அதேபோன்ற காலணி குறைந்த விலையில் வேண்டும் என்று கோருகிறார்கள். சீன உற்பத்தியாளர்கள், தமது வாடிக்கையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அவர்கள் கோரும் விலைக்கு தரத்தைக் குறைந்து அந்தத் தயாரிப்புக்களை வழங்குகிறார்கள். 100 டொலர் பெறுமதியான காலணியை 50 டொலர், 25 டொலர், 10 டொலர் கேள்விக்கு ஏற்றால்போல் உற்பத்தி செய்து தமது வாடிக்கையாளர் அல்லது வெளிநாட்டு வணிகர்களுக்கு வழங்குகிறார்கள். ஆனால் அதன் தரமும் அந்த விலைக்கு ஏற்றால் போல் இருக்கிறது. 50 டொலர்களுக்கு உற்பத்தி செய்த காலணியை இடைத்தரகர்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்குக் கொண்டுவந்து முதல்தர பொருட்களைப் போல் விற்பனை செய்கின்றனர். சில சமயம் ஒரிஜினல் என்று நம்ப மக்கள் வாங்கி, ஏமாறுகின்றனர். விலை மலிவாக இருந்தால் தரமும் மட்டமாக இருக்கும் என்பது உற்பத்தித் துறையில் பொதுவிதி. எனவே, நுகர்வோர் அல்லது மக்கள் இதுகுறித்து தேடியறிந்து பொருட்களை வாங்க வேண்டும். அப்படிச் செய்தால் இந்த சிக்கல்கள் வராது. அத்துடன், சீனாவின் உற்பத்தியாளர்கள் தனியார் துறையினர். தனியார் துறையிருக்கும், உலக வர்த்தகர்களுக்கும் இடையிலான வர்த்தக உறவில் சீன அரசாங்கம் தலையிட முடியாது.” என்று விளக்கமளித்தார்.

சீனாவில் திருட்டுகள் அதிகமா?

சீனாவில் திருடர்களும், ஏமாற்று பேர்வழிகளும் இருப்பார்கள் கவனம் என்று விடயம் அறியாத சிலர் கூற கேட்டிருக்கிறோம். ஆனால் சீனாவில் இருந்த இரண்டு வாரங்களில் அவ்வாறு எந்தவொரு அடையாளத்தையும் காண முடியவில்லை. வீதிகளில் மக்களின் வசதிக்காக அந்தந்த உள்ளுராட்சி மன்றங்களினால் சைக்கிள்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். கைபேசியில் கிவ் ஆரைப் பயன்படுத்தி, அந்த சைக்கிள்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். எமது நாட்டில் அவ்வாறு இருந்திருந்தால் சைக்கிளோடு தூக்கிச் சென்றிருப்பார்கள். ஆனால் சீனாவில் அவ்வாறு இல்லை. எப்படி இவ்வளவு கட்டுப்பாடு இருக்கிறது என்று விசாரித்த போது, அங்கு திருடர்களுக்குத் தண்டனைகள் அதிகம். வீதிகளில் எங்கும் கண்காணிப்பு கமராக்கள். ஒருவர் திருட்டில் சிக்கினாலோ, குற்றம் நிருபணமாகி கைதுசெய்யப்பட்டாலோ அவரின் எதிர்காலம் சூன்யமாகும் அளவிற்கு தண்டனை கடுமையாக இருக்கிறது. கணனிக் கட்டமைப்பில் அவரது படமும், தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர், குறித்த நபர் செல்லும் இடம் அனைத்திலும் அந்த விடயம் பிரதிபலிக்கும். எந்தவொரு விடயத்தையும் அவரால் செய்துகொள்ள முடியாது போய்விடும். குற்றவாளியாக அவர் நிருபிக்கப்பட்டால், அவருக்கு பொது வாழ்வு என்பது பொய்த்துப் போய்விடும் என்ற அளவிற்கு தண்டனைகள் கடுமையாக இருக்கிறது. அதனால் பொதுமக்கள் மிகவும் சுதந்திரமாக தமது வாழ்க்கையை முன்னெடுக்க முடிகிறது. ஆரம்ப நாட்களில் வீதிகளில் கண்காணிப்பு கமராக்கள் கொஞ்சம் சங்கடப்படுத்தினாலும், சட்ட ஒழுங்குகளைப் பின்பற்றும் பட்சத்தில் அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்ற உணர்வு நாட்கள் செல்ல செல்ல உணர முடிந்தது.

சீனாவின் ரோட் அன்ட் பெல்ட்

சீனாவின் மிகப் பெரிய முதலீட்டுத் திட்டமான ரோட் அன்ட் பெல்ட் குறித்து இந்தப் பயணத்தின் போது விரிவாக பேசப்பட்டது. விளக்கமளிக்கப்பட்டது. கொவிட் தொற்றின் பின்னர் நாடுகள் இணைந்து செயற்பட வேண்டும் என்று உலகத் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சீனாவின் ரோட் அன்ட் பெல்ட் திட்டம் இதற்கு வழிவகுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. நூற்றுக்கும் அதிகமான நாடுகள் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் இந்தத் திட்டத்துடன் உடன்படவில்லை. இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டால், உலக வர்த்தகம் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற அச்சம் சில நாடுகளுக்கு இருக்கிறது. எவ்வாறாயினும், திறந்த பொருளாதாரத்தில் தனித்து செயல்பட முடியாது என்ற செய்தியை கொவிட் பெருந்தொற்றும், உலகில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள போர்களும், இவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளும் சொல்லித் தருகிறது.

ஒரேயொரு வருத்தம் அந்தக் காட்சிகளை எம்மால் ஒளிபதிவு செய்து, வீடியோக்களாக வெளியடுவதற்கான முன் ஏற்பாடுகளுடன் செல்லவில்லை. அவ்வாறு சென்றிருந்தால் மிகச் சிறந்த அனுபவத்தை காட்சிகளாக தந்திருக்க முடியும். மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் சீனாவின் அனுபவத்தை காட்சிகளாக கொண்டுவரும் ஆர்வம் இருக்கிறது.

சீனாவின் இந்த இருவாரப் பயணம் சீனா மீதான ஆர்வத்தைத் தூண்டியது. அவர்களின் ஊடகக் கலாச்சாரம், கல்வி, தொழில்நுட்பம், கலை, கலாச்சாரம் ஆகியவற்றை தனித்தனி பதிவுகளாக எழுதும் அளவிற்கு சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கின்றன.

– VAK

Related Articles

Latest Articles