ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புடின் உடனான சந்திப்பை அடுத்து, எதிர்வரும் திங்கள்கிழமை உக்ரைன் ஜனாதிபதி விளாதிமிர் ஜெலன்ஸ்கியை, அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் சந்திக்க உள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “அலாஸ்காவில் நிகழ்ந்த சந்திப்பு சிறப்பானது, வெற்றிகரமானது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிதிர் புடினுடனான சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.
உக்ரைன் ஜனாதிபதிஜெலன்ஸ்கி, மிகுந்த மதிப்புக்குரிய நேடோ பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய தலைவர்களுடன் நேற்றிரவு தொலைபேசியில் பேசினேன்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சிறந்த வழி, நேரடியாக அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதுதான் என்று அனைவராலும் தீர்மானிக்கப்பட்டது.
இது போரை (தற்காலிகமாக) முடிவுக்குக் கொண்டு வரும் வெறும் போர் நிறுத்த ஒப்பந்தம் அல்ல. அவ்வாறு ஒன்று நடந்தால் அது நிலைக்காது. ஜனாதபிதி ஜெலன்ஸ்கி திங்கள்கிழமை மதியம் வெள்ளை மாளிகைக்கு வருவார்.
அனைத்தும் சரியாக நடந்தால், நாங்கள் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் ஒரு சந்திப்புக்கு திட்டமிடுவோம். இது நிகழ்ந்தால் பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.