புதிய அரசின் அமைச்சரவை நாளை திங்கட்கிழமை நியமிக்கப்படவுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளது. அதன் பின்னர் எமது பணிகள் விரைவாக தொடங்கப்படும்.
அபிவிருத்தியடைந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகளை எமது அரசு உடனடியாக ஆரம்பிக்கும்.
இந்த அமைச்சரவை அதிகபட்சமாக 25 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கும். அதிகபட்சமாக 25 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.” – என்றார்.
இராஜாங்க அமைச்சர்களோ அல்லது அமைச்சரவை அல்லாத அமைச்சர்களோ நியமிக்கப்படமாட்டார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.