தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் தெற்கு அரசியலில் தரமான சில அரசியல் சம்பவங்கள் அரங்கேறவுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முன்னெடுத்த முயற்சி தோல்வி கண்டுள்ள நிலையிலேயே அரசியல் களத்தில் சில அதிரடி மாற்றங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிலவேளை ஜனாதிபதியுடனான அரசியல் ரீதியிலான உறவை மொட்டு கட்சி முறித்துக்கொள்ளும் எனவும், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க மொட்டு கட்சி தீர்மானித்துள்ளது எனவும் தெரியவருகின்றது. மே தின கூட்டத்தின்போது இதற்கான சமிக்ஞைகள் வெளியிடப்படவுள்ளன.
அதன்பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து ஒரு குழு பிரிந்துவந்து ரணிலுக்கு நேசக்கரம் நீட்டும் எனவும், இதனால் மொட்டு கட்சி மேலும் பிளவடையும் எனவும் தெரியவருகின்றது.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சம்பிக்க, டலஸ், விமல் அணி உள்ளிட்ட தரப்பினர் புத்தாண்டுக்கு பிறகே எந்த தரப்புக்கு ஆதரவு அல்லது எப்படி போட்டியிடுவது தொடர்பான முடிவை எடுக்கவுள்ளன.
கட்சி தாவல்களும் புத்தாண்டுக்கு பின்னரே இடம்பெற ஆரம்பிக்வும் எனவும் அறியமுடிகின்றது.