புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் உறுதிப்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டும்

சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் கடந்த வருடத்தின் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி கொண்டாடப்பட்ட நிலையில், புலம்பெயர் கட்டுமானத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஆக்கப்பூர்வமான நகர்வுகளை இப் புதிய வருடத்தில் தொழில் தரும் நாடுகளுடன் கலந்துரையாடி முன்னெடுக்க வேண்டும் என, தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் உப தலைவரும், தெற்காசிய பிராந்திய தொழிற்சபையின் பிரதி பொதுச் செயலாளரும், புலம்பெயர் தொழிலாளர் முன்னணியின்  தலைவருமான வேலாயுதம் ருத்திரதீபன் தெரிவிக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்; பெருந்தோட்டங்களில் புலம்பெயர் தொழில் என்பது புதிய விடயமல்ல, நாம் 200 வருடங்களுக்கு முன்பே புலம்பெயர்வை ஆரம்பித்து விட்டோம். எனினும் தற்போதைய காலகட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் தொழில் வகைகள் மாறிவிட்டன. பல்வேறு தொழில்களுக்காக தொழிலாளர்கள் வெளிநாடு செல்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று, பின்னரான பொருளாதார நெருக்கடி காரணமாக முறைசாரா தொழில்களில் ஈடுபட்ட பல்லாயிரக் கணக்கானோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். வாழ்வாதாரம் தேடி வெளிநாடுகளுக்கு சென்றனர். இவ்வாறு சென்றவர்கள் முறையான தொழில் பயிற்சிகளைப் பெற்றிருக்கவில்லை.இதன் காரணமாக இவர்களின் தொழில் தருநர்களால் பல்வேறு கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

கெளரவமான தொழில் அங்கீகாரம் இன்றி, உணவு ,உடை,உறையுள் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்படாது ,பயண கடவுச்சீட்டையும் தொழில் தருநர்களிடம் வழங்கிவிட்டு தொழில் செய்யும் நிலைமைக்குத் இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனாவின் பின்னர் பெருவாரியாக கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்த ஆயிரக் கணக்கானோர் உலக நாடுகளில் ஏற்பட்ட பலதரப்பட்ட நெருக்கடியான காலகட்டங்கள் காரணமாக வேலையிழந்து  நாடு திரும்பியுள்ளனர். உள்நாட்டிலும் தொழில் வாய்ப்பின்றி கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். இதனால்  இவர்களது குடும்பங்களுக்கு மாத்திரமன்றி சமூகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டு, நாடு வெளிநாட்டு வருமானத்தை இழந்து வருகின்றது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் மலையக இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். இதற்கு காரணம் அவர்களுக்கு முறையான தொழிற் சான்றிதழ் இன்மையாகும். பெருந்தோட்டங்கள் முறையாக நிர்வாகம் செய்யப்படாமையினால் இலாபம் இழந்துள்ளன. இந்நிலையில் அந்நியச் செலாவணி வருமானமே நாட்டை மீட்டெடுக்க ஆதாரமாகியுள்ளது.

அரசாங்கம் இந்நிலைமையைக் கருத்திற் கொண்டு கட்டார் நாட்டில் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்ற வேளையில் மைதான அமைப்பு உட்பட பராமரிப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் முறையான தொழில் பாதுகாப்பை வழங்கியதைப் போன்று, ஏனைய புலம்பெயர் தொழிலாளர்கள் பணி செய்யும் நாடுகளிலும்  தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு முறையான தொழிற் பயிற்சியை இலவசமாக வழங்கி, கெளரவமான தொழில் புரியும் வகையில் வினைத்திறனை அங்கீகரிக்கும் தொழிற் சான்றிதழையும் வழங்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் அந்நிய செலாவணி வருமானத்தில் புலம்பெயர் நலனுக்காக குறித்த சதவீதத்தை ஒதுக்கி அவர்கள் நலன் பேணுவது போன்று இங்கும் நிதியம் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் நாடு அதிக அந்நிய செலாவணியைப் பெற்று விரைவில் பொருளாதார மீட்சி காணும் என்றார்.

Related Articles

Latest Articles