பெருந்தோட்டக் காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்கத் திட்டம்: மலையகத் தமிழர்களின் இருப்புக்கு ஆபத்து

வருமானம் ஈட்டாத பெருந்தோட்டத் துறைக்குச் சொந்தமான காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீட்டாளர்களுக்குக் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதால், பெருந்தோட்டங்களில் இதுவரை காலமும் வாழ்ந்து வந்த மலையகத் தமிழ் மக்களுக்கு தமது வாழ்விடங்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தமிழ் மக்கள் பிரதிநிதி ஒருவர் எச்சரித்துள்ளார்.

150 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுப்பதற்காக வியர்வை சிந்தி உழைத்து வரும் மலையகத் தமிழ் மக்கள், குடியிருப்புக்காகக் கோரி வரும் தரிசு நிலங்களை அவர்களுக்கு வழங்காமல் சுற்றுலாத்துறை உள்ளிட்ட வேறு முதலீடுகளுக்காகப் பகிர்ந்தளிப்பது குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவலை வெளியிட்டுள்ளார்.

சிங்கள பௌத்த தேசிய வீரராகக் கருதப்படும் அனகாரிக தர்மபாலவின் சிந்தனையை மலையகத்தில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக, மலையக அரசியல் அரங்கின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

2026 ஒக்டோபர் 26ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, உயர் மட்ட கொள்முதல் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை மற்றும் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் ஆகியவற்றுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் சொத்துக்களைத் தெரிவுசெய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வழங்குவதற்குப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

மூன்று அரச நிறுவனங்களாலும் குறைந்தளவில் பயன்படுத்தப்படும் காணிகள் மற்றும் சொத்துக்களை உகந்த முறையில் பயன்படுத்துவதற்காகப் பொருத்தமான முதலீட்டாளர்களுக்குக் குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு, ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடமிருந்து விருப்ப வெளிப்பாடுகளை கோருவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

அதற்கமைய, முதற்கட்டமாக 1,514 ஹெக்டேயர் காணிகள், சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள் மற்றும் அழகிய இடங்கள் 10, அத்துடன் செயலிழந்த 15 தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்காக விருப்ப வெளிப்பாடுகள் கோரப்பட்டதாகவும், இதற்காக 470 முதலீட்டாளர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறுகிய பட்டியலில் தெரிவுசெய்யப்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகளுக்கான கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. காணிகள் மற்றும் சொத்துக்களின் 30 பகுதிகள் தொடர்பாக 44 முன்மொழிவுகள் கிடைத்ததையடுத்து, அவற்றை மதிப்பீடு செய்த பின்னர் அமைச்சரவை மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், அரசாங்கம் இந்நாட்டிலிருந்த பாரிய தேயிலைத் தோட்டங்களைச் சிறிய தேயிலைத் தோட்டங்களாக மாற்றும் நடவடிக்கையைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுத்து வந்துள்ளதாக, மயில்வாகனம் திலகராஜா தெரிவிக்கின்றார்.

“இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் பிரித்தானியர்களிடமிருந்து காணிகளைப் பெற்றுக்கொண்ட காலம் முதல் இலங்கை அரசாங்கம் ஒரு நடவடிக்கையை மிகவும் நுட்பமாக முன்னெடுத்து வருகின்றது. அது என்னவென்றால், பாரிய தேயிலைத் தோட்டங்களிலிருந்து சிறிய தேயிலைத் தோட்டங்களை உருவாக்கும் நடவடிக்கையை மிகவும் நுட்பமாக முன்னெடுத்து வந்துள்ளது.

1948 முதல் 1972 வரையான காலப்பகுதியில் 20 சதவீதமும், அதன் பின்னர் 1972 முதல் 1992 வரையான காலப்பகுதியில் மேலதிகமாக 25 சதவீதமும் என, 1992ஆம் ஆண்டளவில் ஏறத்தாழ 50 சதவீதமாக மாறியது. தற்போது 78 சதவீதம் சிறு தேயிலைத் தோட்டங்களாகவும், 22 சதவீதம் பெருந்தோட்டங்களாகவும் உள்ளன.”

அரசாங்கத்தின் வசமுள்ள சுமார் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான சிறு தேயிலைத் தோட்டங்களையும் தனியார் முதலீடுகள் என்ற பெயரில் நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலம் அவை இனிமேலும் தேயிலைத் தோட்டங்களாகத் தொடராது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜா சுட்டிக்காட்டுகிறார்.

“22 சதவீதமாக இருந்த சிறு தேயிலைத் தோட்டங்களில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பகுதியே அரசாங்கத்தின் கைகளில் உள்ளது. எஞ்சியவை RPC நிறுவனங்களின் கைகளில் உள்ளன. அந்த எஞ்சிய இரண்டு சதவீதத்தையும் தனியார் முதலீடுகள் என்ற பெயரில் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு முயற்சிக்கின்றனர்.

அதுவும் ஒருவகையில் சிறு தேயிலைத் தோட்டங்கள்தான். ஆனால், சிறு தேயிலைத் தோட்டங்களாகத் தொடராமல் அவர்கள் வேறு நோக்கங்களுக்காக அவற்றை வழங்குகின்றனர். இனிமேல் அவை தேயிலைத் தோட்டங்களாக இருக்காது.”

இலங்கையில் தமக்கென ஒரு வீட்டை அமைத்துக்கொள்வதற்கு இதுவரை ஒரு துண்டுக் காணியைக்கூடப் பெற்றுக்கொள்ளாத பெருந்தோட்டத் தமிழ் தொழிலாளர், தேயிலை, இறப்பர் தோட்டங்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள சிறிய வரிசை வீடுகளிலேயே (லயன் அறைகள்) இன்னமும் வாழ்ந்து வருகின்றனர்.

பெருந்தோட்டத் துறையில் தற்போது பயன்படுத்தப்படாத காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீட்டாளர்களுக்குக் குத்தகைக்கு வழங்குவதன் மூலம் இன்னும் பத்து ஆண்டுகளில் தேயிலைத் தோட்டங்கள் இல்லாமல் போய்விடும் என எச்சரிக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜா, பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வரும் சமூகத்தினர் தங்களது வாழ்விடங்களை இழக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

“குறைந்தபட்சம் அவர்களது குடியிருப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது, அந்தத் தோட்டத்தில் நிரந்தரத் தொழிலாளர்களாக அவர்கள் பணியாற்றியதன் மூலமாகத்தான். முறையான சட்டங்களுக்கு உட்பட்டு ஊழியர் சேமலாப நிதிக்கு (EPF) பங்களிப்புச் செய்யும் தொழிலில் அவர்கள் இருந்தனர். இப்போது அதற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அவ்வாறாயின், அவர்களுக்கு அடித்தளமாக இருந்த தொழிலாளர் பங்களிப்பு என்ற பொருளாதாரச் செயல்முறையிலும் கை வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்ந்த காணிகளை வழங்கமாட்டோம் என்று கூறுவதால்தான் நான் இதனைக் கூறுகின்றேன். இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தப் பெருந்தோட்டத் துறை இருக்காது. இந்தச் சமூகத்தின் இருப்பு அதில்தான் தங்கியிருந்தது. இங்குள்ள தொழிலாளர்கள்தான் வேர்ச் சமூகம் என்று நான் அடிக்கடி கூறி வருகின்றேன். இப்போது அந்த அடிப்படையிலேயே கை வைக்கப்பட்டுள்ளது.”

இலங்கையின் பெருந்தோட்டப் பகுதியை 100 ஆண்டுகளுக்குள் இல்லாதொழிப்பதற்கான அனகாரிக தர்மபாலவின் சிந்தனையை தற்போதைய ஜனாதிபதி மிக வேகமாக நடைமுறைப்படுத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா குற்றஞ்சாட்டுகிறார்.

“1948 முதல் 2048ஆம் ஆண்டளவில் பெருந்தோட்டங்களை பூச்சியமாக்குவதே சித்தாந்தம் (Philosophy). அதனை ஒரு கொள்கையாகக் கொண்டு அவர்கள் செயற்பட்டனர். நான் குறிப்பிட்ட அந்தக் கொள்கை, இந்தச் சிந்தனை யாருடையது என்றால், அது அனகாரிக தர்மபாலவின் சித்தாந்தம். அதாவது, அந்நியர்கள் கொண்டுவந்த முதலீடு, அந்நிய உழைப்பு, இந்த பெருருந்தோட்டப் பொருளாதாரத்தின் ஊடாக அந்நியர்கள் நாட்டுக்குள் நுழைந்தார்கள். எனவே, பெருந்தோட்டங்களை இல்லாதொழித்து அவற்றை நாம் கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்பதே அவரது கருத்தியலும் சிந்தனையுமாகும்.”

கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் இந்தச் சிந்தனையை நடைமுறைப்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தை தற்போதைய அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளதாகவும் மேலும் குற்றஞ்சாட்டுகிறார்.

“ஒவ்வொரு கட்சியும் அனகாரிக தர்மபாலவின் இந்தச் சிந்தனையை மிகவும் கவனமாகத் தமக்குள் உள்வாங்கிக்கொண்டன. ஆட்சிக்கு வந்தவுடன் இவை வெளிப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் குடியுரிமையைப் பறித்து இதனை வெளிப்படுத்தியது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்தபோது சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் இவர்களை நாடு கடத்தி அதனை வெளிப்படுத்தியது. மீண்டும் இந்த இரு கட்சிகளும் ஆட்சியில் இருந்தபோது கட்டாய கருக்கலைப்பின் மூலம் இதனைச் செய்தன.

மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், விடுதலை அமைப்பாகச் செயற்பட்ட காலத்தில், இவர்களை இந்திய விஸ்தரிப்புவாதத்தின் ஒரு பகுதியாகச் சித்தரித்து – இதுவும் அனகாரிக தர்மபாலவின் அதே கருத்தை வேறு பெயரில் முன்வைப்பதாகும் – தோட்டங்களை நட்டத்தில் தள்ளுவதன் மூலம் இவர்களது பொருளாதாரத்தை அழித்து, இவர்களை வலுவிழந்த சமூகமாக மாற்ற வேண்டும் என்று கூறி 1989, 1990ஆம் ஆண்டுகளில் தொழிற்சாலைகளுக்குத் தீ வைத்தனர்.

இப்போது ஆட்சிக்கு வந்த பின்னர், ஏனைய தரப்பினர் 2048ஆம் ஆண்டில் செய்ய வேண்டும் என நினைத்ததை 2034, 2038ஆம் ஆண்டுகளிலேயே, அதாவது 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்னதாகவே செய்ய வேண்டும் என்ற வகையில் மிகவும் வேகமாகச் செயற்பட்டு வருகின்றனர்.”

இலங்கையின் சுதந்திரப் போராட்டம், பௌத்த மதத்தின் மறுமலர்ச்சி மற்றும் சமூக, கலாசார எழுச்சி ஆகியவற்றுக்காக ஆற்றிய தனித்துவமான பங்களிப்பின் காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் தேசிய வீரராகத் திகழ்ந்த அனகாரிக தர்மபாலவின் கோட்பாட்டை, மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர பயன்படுத்தியதைப் போலவே, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் அவர்கள் இருவரினதும் அந்தக் கோட்பாட்டை அவர்களைவிட வேகமாக நடைமுறைப்படுத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா தெரிவிக்கிறார்.

“அதில் ஒன்று, முதலீடு என்ற பெயரில் அரச தோட்டங்களை வழங்குவதாகும். இரண்டாவது, மலையகத்தைப் பாதுகாக்க வேண்டும், மண்ணைப் பாதுகாக்க வேண்டும், மலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறி அதிகார சபைகளை அமைப்பதாகும். ரோஹண விஜேவீர அனகாரிக தர்மபாலவின் கோட்பாட்டைப் பயன்படுத்தியதைப் போல, அநுர குமார திஸாநாயக்க அவர்கள் இருவரினதும் கோட்பாடுகளை அவர்களைவிட வேகமாக முன்னெடுத்து வருகின்றார்.”

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக வியர்வை சிந்தி உழைத்து வரும் மலையக மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்துவதாகத் தொடர்ந்து வாக்குறுதிகளை வழங்கி வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அந்த மக்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றியுள்ளதாக அண்மைக்காலமாக தற்போதைய அரசாங்கத்தின் மீது தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், 2026 செப்டெம்பர் 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், பூனாகலை, கபரகலை மண்சரிவில் வீடுகளை இழந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாகம” வீட்டுத் திட்டத்தின் பயனாளிகளுக்கு, அந்தக் காணியின் உரிமையை உறுதிப்படுத்தும் உறுதிப்பத்திரத்தை அரசாங்கம் இதுவரை வழங்கவில்லை எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related Articles

Latest Articles