பெருந்தோட்டங்களில் பெண்கள் வேலை செய்தாலும் கம்பனிகளின் பணிப்பாளர் சபையில் பெண்கள் இல்லை! ஜனாதிபதி

பெருந்தோட்டங்களிலும், ஆடை தொழில்துறையிலும் பெண்கள் அதிகமாக பணியாற்றுகின்ற போதிலும், அந்த நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் பெண்கள் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெண்கள் பெரும்பான்மையாக பணியாற்றும் நிறுவனங்களில் பெண்களுக்கு பொறுப்புக்கள் வழங்க வேண்டும் என்றும் என்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமானது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த தவறை, தனியார்துறை மட்டுமல்ல அரசாங்கமும் செய்துள்ளது என்றும் அரசாங்கக் கூட்டுத்தாபனங்களிலும் பெண் பிரதிநிதித்துவம் இல்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று விசேட உரையொன்றை ஆற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,

”நாம் என்ன செய்திருக்கிறோம். 90 வருடங்களாக இரண்டு வீதத்தை 5 வீதமாக மட்டுமே உயர்த்தியுள்ளோம். ஆளும் கட்சியில் இருந்தும், எதிர்க்கட்சியில் இருந்தும் எமக்கு இதனை செய்ய முடியாமல் போனது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எமக்கு இரண்டு வீத பெண் பிரதிநிதித்துவம் இருக்கும்போது ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தில்கூட அந்த இரண்டு வீதம் இருக்கவில்லை. இன்று நிலைமை வேறாக இருக்கிறது. பாராளுமன்றத்தில் 5.3 வீதமான பெண் பிரதிநிதிகளே இருக்கின்றனர். பாலினம், சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்திற்கான கொள்கைகளை வகுக்குமாறு அறிவுறுத்தினேன். அந்தப் பணிகள் நடந்து வருகின்றன. சட்டம் மற்றும் கொள்கை மறுசீரமைப்பு மற்றும் பெண்கள் உரிமை, பாலினம், சமத்துவம், ஆகிய விடயங்களுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்காக பாலினம் சமத்துவம் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கத் தேவையான பங்களிப்புச் செய்வதற்கு பாராளுமன்றத்திற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்க வேண்டும். அதிகாரத்துடன் கூடிய தேசிய பெண்கள் ஆணைக்குழு என்ற பெயரில் சுயாதீன ஆணைக்குழுவொன்றை பாராளுமன்ற சட்டமூலத்தின் ஊடாக ஸ்தாபிக்க வேண்டும். அரசாங்கம் இதற்கு ஆதரவளிக்கிறது என்று நான் கூறுகிறேன். எதிர்க்கட்சி இதனை எதிர்க்கும் என்று நான் நினைக்கவில்லை. விசாரணை நடத்த ஒம்புஸ்மன் ஒருவரை நியமிக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் மட்டும் இதுகுறித்து கதைப்பது போதுமானதாக இருக்காது. எமது பெருந்தோட்ட நிறுவனங்கள் குறித்து பாருங்கள். பெருந்தோட்டங்களில் பணியாற்றும் பெரும்பாலானவர்கள் பெண்கள். ஆனால் பணிப்பாளர் சபையில் ஒரு பெண்ணாவது இருக்கிறார்களா என்று பாருங்கள். ஆடை தொழில்துறையில் பெரும்பாலானவர்கள் பெண்கள் இருக்கின்றனர். ஆனால் நிறைவேற்று அதிகாரத்தில் ஒரு பெண் இருக்கிறாரா? இவ்வாறு பெண்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. குறிப்பாக பணிப்பாளர் சபைகளில் பெண்களுக்கு பொறுப்புக்கள் வழங்க வேண்டும். அத்துடன் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமானது. இந்த தவறை, தனியார்துறை மட்டுமல்ல அரசாங்கமும் செய்துள்ளது. எமது கூட்டுத்தாபனங்களிலும் பெண் பிரதிநிதித்துவம் இல்லை.

இதற்காக சட்டமொன்றை இயற்றினால், சட்டத்தின் மூலம் இதனை சரிசெய்ய முடியும். இதுபோன்று பாரிய குறைபாடுகள் உள்ளன. இவற்றைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். கல்வித்துறையில் அநேகமான பெண்கள் இருக்கின்றனர். ஆசிரியர், அதிபர்களாக பெண்களே அதிகமாக இருக்கின்றனர். சுகாதாரத் துறையிலும் பெண்கள் இருக்கின்றனர். நிர்வாகத்துறையிலும் பெண்கள் இருக்கின்றனர். தனியார் துறையில் இந்த வளர்ச்சி ஏற்படவில்லை. ஆனால் பல்கலைக்கழகங்களிலும், வெளியிலும் 50 வீதத்திற்கும் அதிகமான பெண்களே கல்வி பயில்கின்றனர். சிறுவர் நலன்புரி விடயங்களையும் இந்த கூட்டமைப்பிடம் ஒப்படைத்துள்ளோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Related Articles

Latest Articles