பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, எவ்வித நிபந்தனைகளும் இன்றி அவர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்றது. இதன்போது சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சனால் மேற்படி பிரேரணை முன்வைக்கப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும், தொழில் அமைச்சுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தீர்மானம் வருமாறு,
தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1000/= வழங்கப்பட வேண்டும் என்கின்ற தீர்மானம் கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் எடுக்கப்பட்ட கோரிக்கையாகும் இதன் இன்றைய நாணயமாற்றுப் பெறுமதி 1430/= ஆகும்
குறிப்பாக தமது நாளாந்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நாளாந்தம் செய்து வருகின்ற தேயிலை கொழுந்து பிடுங்கும் தொழிலில் பாரிய பிரச்சினைகள் மற்றும் ஆபத்துக்கள் காணப்படுகின்றன குறிப்பாக குளவி கொட்டுதல், சிறுத்தை போன்ற விலங்குகளின் தாக்குதல் சம்பவங்கள்,அட்டை கடிகள், மற்றும் மலை ஏறுதல் போன்ற அச்சுறுத்தல்கள் இவ் வேலையில் காணப்படும் மிகப்பெரிய சவால்கழாகும்
அத்துடன் தேயிலை கம்பெனிகளின் முகாமை தொழிலாளர்களை மரியாதையுடன் நடாத்துவதில்லை. 1950ம் ஆண்டுகளில் இருந்ததைப் போன்று அடிமைத்துவ முகாமையும் தொழிலாளர்களது உரிமைகள் பேனப்படாததுமான கலாச்சரமே நிலவி வருகிறது.
ஆகவே எனது பிரேரணையிற்கான தீர்மானமாக
1) அடிப்படை சம்பளம்1000 ரூபா வழங்க வேண்டும்
2) மாதாந்த வேலை நாட்கள் குறைந்தது 24ஆவது இருக்கவேண்டும்
3)நாளாந்த சம்பளத்திற்கான தேயிலையின் நிறை அநியாயமாக அதிகரிக்கப்படக்கூடாது.
4) தொழிலாளர்கள் மரியாதையுடன் முகாமை செய்யப்பட வேண்டும்.
5) தொழிலாளர்கள் எதிர்நோக்கும் ஆபத்துக்களுக்கான இழப்பீடுகள் கொடுப்பனவுகள் மற்றும் போதியளவான விடுமுறைகளும் வழங்கப்பட வேண்டும்.
இவை போன்ற தொழிலாளர்களது உரிமைகளும் 1000/= நாளாந்த சம்பளமும் என்கின்ற விடையங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டு நீதியான ஒரு கூட்டு ஒப்பந்தம் இம்முறை நிறைவேற்றப்பட வேண்டும்.