மலையக பெருந்தோட்டப்பகுதிகளில், பெரும்பாலான தோட்டங்களில் சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படுவதில்லை என பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. பலர் முகக்கவசம் அணியாமல் லயன்களுக்குள் நடமாடுகின்றனர். அணியும் சிலரும் அதனை முறையாக அணிவதில்லை.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது எனக்கூறப்பட்டாலும் பெருந்தோட்டப்பகுதிகள் வழமைபோலவே செயற்படுகின்றன. பெருந்தோட்டப்பகுதிகளை அண்டியுள்ள நகரங்கள் மூடப்பட்டிருந்தாலும் தோட்டப்பகுதிகளில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை.
வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தார்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் தனிமைப்படுத்தப்படுவதில்லை. அவர்களும் லயன்களில் சுதந்திரமாக நடமாடும் நிலைமை காணப்படுகின்றது.
எவருக்காவது சளி, தடிமன் ஏற்பட்டு வைத்தியசாலைக்கு சென்றால், அவரை தனிமைப்படுத்தில் இருக்குமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கினாலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொழிலுக்கு செல்லும் நிலைமை காணப்படுகின்றது. இதனால் தோட்டப்பகுதி முழுவதும் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
சட்டவிரோத மது விற்பனை தாராளமாகவே இடம்பெறுகின்றது. கசிப்பு, கள்ளு போன்ற சட்டவிரோத மது உற்பத்திகளும் தாராளமாகவே இடம்பெற்றுவருகின்றன.
குறிப்பாக சில இடங்களில் இந்திய செனல்களே வீடுகளை ஆக்கிரமித்துள்ளன. செய்திகள் பார்க்கப்படுவது குறைவு. நாட்டு நடப்பு தெரிவதில்லை. இதுவும் பெரும் குறைபாடாக காணப்படுகின்றது.
மக்களே, பெருந்தோட்டப்பகுதியை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கில் இதனை சுட்டிக்காட்டவில்லை. தற்போது தன்நலன் மற்றும் சமுதாய நலன்கருதி செயற்பட வேண்டிய தருணம் இது.
இதனை பேஸ்புக்கில் எழுதி அவர்கள் பார்ப்பார்களா என சிலர் கேட்கலாம். ஆனால் அரசியல் பிரமுகர்களும், சுகாதார அதிகாரிகளும் நிச்சயம் பார்ப்பார்கள். எனவே, குறைந்தபட்ச நடவடிக்கையை எடுப்பதற்காகவேனும் இது உதவியாக இருக்கும் என நம்புகின்றோம்.
சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுங்கள். தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுங்கள். நோய் அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். வைத்திய ஆலோசனையின் பிரகாரம் செயற்படுங்கள்.