பெருந்தோட்ட தொழில் முறைமையில் மாற்றம் அவசியம்!

150 வருடங்களுக்கு மேல் பழமையான பெருந்தோட்ட தொழில் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.

நானுஓயா ரதெல்ல பகுதியில் தோட்ட நிறுவனத்தால் நடத்தப்பட்ட சிறந்த தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்ட பின் ஊடகங்களுக்குப் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“சம்பள உயர்வு முன்மொழிவு தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சு நடத்தவில்லை. எதிர்காலத்தில் நடத்துமென நம்புகின்றோம்.

உற்பத்தி அடிப்படையிலான சம்பள உயர்வையே அரசாங்கம் கருதுகின்றது என நினைக்கின்றேன். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாம் இல்லை. ஆனாலும் குறைந்தளவான விளைச்சல் மற்றும் விலையால் வழங்கமுடியாத சூழ்நிலை உள்ளது.

உற்பத்தி திறன் அடிப்படையிலான சம்பளமே சிறந்த நடைமுறையாக இருக்கும். பெருந்தோட்ட தொழில்முறையில் 150 வருடங்களாக உள்ள தொழில் நடைமுறை மாற்றப்பட வேண்டும்.

காலையில் 8 மணிக்கு வேலைக்கு செல்லுதல், 12 மணிக்கு மதிய உணவுக்கு வருதல், அதன் பின்னர் மீண்டும் வேலைக்கு செல்லுதல் என்ற நிலை காணப்படுகின்றது.எனவே, குறிப்பிட்ட அளவான தொகையை பறித்தால் அவர்களுக்கு வீடு திரும்பக்கூடிய நிலை காணப்பட வேண்டும். அது பெண் தொழிலாளர்களுக்கு குடுபத்தைக் கவனித்துக்கொள்ளவும், ஓய்வெடுக்கவும் உதவியாக இருக்கும்.

10 வருடங்களாக இந்த கோரிக்கையை நாம் முன்வைத்துவருகின்றோம். உற்பத்தி திறன் அடிப்படையில் அதிக சம்பளத்தை தொழிலாளர்கள் பெறுவதை நாம் எதிர்க்கவில்லை. எனவே, புதிய நடைமுறையொன்று அவசியம். உற்பத்தி திறன் அடிப்படையில் சென்றால் நாளொன்றுக்கு 4 ஆயிரம் ரூபாவரையில்கூட உழைக்கலாம்.” – என்றார்.

(க.கிஷாந்தன்)

Related Articles

Latest Articles