மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைக்கப்பெறும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொட்டகலையில் நடைபெறும் இதொகாவின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாம் மறந்துவிடவில்லை. லயன்கள் காணப்படும் பகுதிகள் கிராமங்களாக மாற்றப்படும். அப்போது கிராமங்களுக்குரிய சலுகைகள் தோட்டப்பகுதிகளுக்கு கிடைக்கப்பெறும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சம்பள அதிகரிப்பு தொடர்பான முழுமையான விபரங்களை தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார அவரின் உரையின்போது தெளிவுபடுத்துவார் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பெருந்தோட்ட மக்களுக்கு உரிமைகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் அவர்கள் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பு வழங்கினர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரத்து 350 ரூபாவும், விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்கப்படவுள்ளது. இதன்படி ஒரு நாளுக்குரிய மொத்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.










