பெரும்பான்மையை இழந்தார் இம்ரான் கான்! பதவி பறிபோகுமா?

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை முக்கிய கூட்டணி கட்சியான MQM வாபஸ் பெற்றுள்ளது. இதனால் இம்ரான் கான் அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது.

இம்ரான் கான் அரசிற்கு ஆதரவை வாபஸ் பெற்றதோடு அல்லாமல் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் MQM கட்சி உடன்படிக்கையையும் செய்து கொண்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது.

343 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 172 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும். ஆனால் MQM கட்சி ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளதால் இம்ரான் கான் அரசுக்கான ஆதரவு 164 ஆக குறைந்துள்ளது. அதே நேரம் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வியடைவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

விலைவாசி உயர்வு உள்ளிட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கும் நிலையில் இதற்கு இம்ரான் கானின் மோசமான ஆட்சியே காரணம் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதைத் தொடர்ந்து இம்ரான் கானின் அரசை கவிழ்க்கும் முயற்சியிலும் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

Related Articles

Latest Articles