ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட இளைஞனொருவன் இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளைஞனுக்கு அண்மையில் இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதுடன் போதைப்பொருள் பாவனையை நிறுத்துமாறும் மருத்துவர்களினால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்த திங்கட்கிழமை மீளவும் ஊசிமூலம் போதைப்பொருளை இளைஞன் எடுத்துக் கொண்டமையால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் உயிரிழப்புக்கு போதைப்பொருளினால் இருதயத்தில் ஏற்பட்ட கிருமித்தொற்றுதான் காரணம் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையினால் இந்த மாதத்தில் இரண்டாவது உயிரிழப்பு இது என்பதுடன் அண்மைக்காலமாக 10இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
