போதைப்பொருள் பொட்டலமாகியது இலங்கை!

நாட்டில் இன்று எட்டுத்திக்கும் போதைப்பொருளின் ஆக்கிரமிப்பு எல்லையைக் கடந்து சென்றுவிட்டது. சிறியோர் முதல் பெரியோர் வரை போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்ற நிலைமை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுவிட்டது. இலங்கையின் எதிர்காலம் போதையில் கிறங்கிக்கொண்டு தன்நிலை மறந்து கிடக்கிறது.

ஊழல்மோசடி, வீண்விரயம், அதிகார துஸ்பிரயோகம், கொந்தராத்து வேலைகள், எமது நாட்டு வளங்களை பணமுதலைகளைக்கு தாரைவார்க்கும் ஆளும் வர்க்கத்தின் அரசியற் கொள்கை மற்றும் நெருப்பு வட்டிக்கு வாங்கிக் குவிக்கின்ற மக்கள் வேலைத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படாத கடன் போன்ற காரணங்களால் இன்று எமது நாடு பாரிய பொருளாதார நெருக்கடி மிகுந்த கிடங்கிற்குள் தள்ளப்பட்டுவிட்டது. இதற்கான பிரதான காரணமாகவிருப்பது எமது நாட்டில் இதுவரையில் நிலவி வருகின்ற சீரழிந்த, கேடுகெட்ட அரசியற் கலாச்சாரமாகும். இந்த அரசியற் கலாச்சாரத்தைப் போற்றிப் புகழ்ந்து பாடி பாதுகாத்து வருகின்ற சால்வையும் கோட் சூட்டும் அணிந்துகொண்டு திரியும் சகபாடி அரசியற் தலைவர்கள் மற்றும் அவர்களின் அல்லக்கைகளினால் முழு நாட்டு சாதாரண மக்களும் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கையில் தற்போது வறுமை தலைவிரித்து தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. மலையகம், தென்பகுதி, வன்னி, கிழக்குப் பகுதி என்று எல்லா பகுதிகளிலும் போசாக்கின்மை அதிகரித்துப் போயுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் அதேநேரத்தில், தொழில்புரிகிறவர்களுக்கு கிடைக்கின்ற சம்பளமும் தற்போது கட்டுப்படியாகாது இருக்கிறது. அதீத வட்டி மற்றும் வரிச்சுரண்டலினால் மக்கள் ஓடாய்த் தேய்கின்றனர். தொடரந்து இலங்கையில் வாழ அச்சம் கொண்டு பலரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் தொழில் வாய்ப்புகளைத் தேடி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இவ்வாறு செல்லுமிடங்களிலும் கீழ்த்தரமாக எமது இலங்கை மக்கள் நடத்தப்படுவதையும் அவர்களது குமுறல்களையும் தினமும் காணக்கூடியதாக இருக்கிறது. நாட்டுக்கு பாரிய அந்நிய செலாவணியைப் பெற்றுத்தரும் வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் குவைத் காப்புறுதி நிறுவனத்தில் இருந்து 700 கோடி ரூபாவுக்கு அதிகமான பணம் திருடப்பட்ட சம்பவம் கோப் அறிக்கையில் வெளிவந்திருந்தமை குறிப்பிடதக்கது. மருத்துவம், கல்வி, விவசாயம், கைத்தொழில் மற்றும் வர்த்தகம் என்று எல்லா துறைகளும் நாட்டில் வீழ்த்தப்பட்டுவிட்டது. எதிர்காலத்தை தொலைத்து இளைஞர்கள் உட்பட ஒட்டுமொத்த சாதாரண இலங்கை மக்களும் கேள்விக்குறியை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உறவுகளுக்கிடையில் முரண்பாடும் மோதலும் பிரிவும் அதிகரித்துப் போயுள்ளது. இவ்வாறான நிலையில் மக்களை மேலும் முடக்கிப்போடும் நிமித்தம் திட்டமிட்டு போதைப்பொருள் வியாபாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவற்துறையினர், பாதுகாப்புப் படையினரின் பூரண ஆதரவுடன் இது தங்குதடையின்றி அரங்கேறிவருகிறது. இதற்கு சமாந்தரமான கருத்தை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பதிவு செய்திருந்தார். பலரும் இதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தும் வருகிறார்கள்.

நாட்டில் ஆட்சி மாற்றத்தை மேற்கொண்டு மக்கள் ஆட்சியை நிறுவுவதற்கு இலங்கையர்கள் கங்கணங்கட்டிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், இதுவரையில் பிரிவினைவாதம், பயங்கரவாதம் என்று மக்களைத் துண்டாடி அவர்களின் பொது சிந்தனையை மழுங்கடித்தவர்கள் தற்போது போதைப் பொருளையும் தமது பிரம்ம அஸ்திரமாக கையில் ஏந்தியுள்ளனர்.

இந்தக் கொடூர தாக்குதலின் விளைவாக பாடசாலை மாணவர்கள் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகி தற்போது புணர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கொழும்பு நகரப்பகுதிகளில் பணிபுரியும் இளைஞர்கள் இதிலிருந்து மீளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக மலையக இளைஞர்கள்.

வடக்கு கிழக்கு பல வருடங்களாகவே இதன் பிடியில் சிக்குண்டு கலாச்சார சீரழிவை சந்தித்து வருகிறது. இன்று முழு நாட்டின் நிலைமையும் இதுவாகவே இருக்கிறது. இதன் தொடர்ச்சி கொள்ளை, கொலை, துஸ்பிரயோகம் என்று ஒரு காட்டுமிராண்டித்தனமான சூழலையே ஏற்படுத்திவிடப் போகிறது.

ஆகவே, மனிதனை மிருகமாக்குகின்ற, பைத்தியக்காரர்களாக மாற்றுகின்ற இந்தப் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகவும், வியாபாரிகள் உட்பட இதனோடு சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் எதிராகவும் அணிதிரள்வோம்.

#போதைப்பொருட்களை_ஒழித்துக்கட்டுவோம்!

சதீஷ் செல்வராஜ்

Related Articles

Latest Articles