போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்: நாளை முதல் பணயக் கைதிகள் விடுவிப்பு

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம், நாளை முதல் ஹமாஸ் தரப்பு பிணைக் கைதிகளை விடுவிப்பதும் அதற்கு மாற்றாக சிறைகளில் இருந்து பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிப்பதும் நிகழவிருக்கிறது.

இருப்பினும் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே அமைந்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததும் முதல் ஆறு வாரம் இரு தரப்பினரும் ‘அமைதியாக’ இருக்க வேண்டும் என்று கத்தார் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

முதல் கட்டமாக ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தம் இருக்கும். அப்போது ஹமாஸ் தரப்பிலிருந்து 33 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர்.

இவர்களில் பெண்கள், குழந்தைகள், இராணுவ வீரர்கள் அடங்குவர்.

அதேபோல் இஸ்ரேல் தரப்பு இந்த காலக்கட்டத்தில் 737 பாலஸ்தீனர்களை விடுவிக்கும். இதற்கான பட்டியல் தயாராகியுள்ளது.

ஹமாஸ், இஸ்ரேல் விடுவிப்பு பட்டியல்கள் தயாராக இருந்தாலும் கூட இருதரப்பிலும் இந்த விடுவிப்பு நிகழ்வானது ஞாயிறு மாலை 4 மணி அளவில் நடக்கும் எனத் தெரிகிறது.

 

Related Articles

Latest Articles