போலி 5,000 ரூபா பெறுமதியான 30 நோட்டுகளுடன் 3 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக, தென்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்தது.
அக்குரஸ்ஸ, மாரம்பே மற்றும் அஹங்கம பிரதேசங்களைச் சேர்ந்த மூவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மாரம்பேயைச் சேர்ந்த சந்தேகநபர், அக்குரஸ்ஸ நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் 5,000 ரூபா நோட்டை வழங்கி பொருட்களை கொள்வனவு செய்துள்ளார். அப்போது, இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, உடனடியாக செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபரை கைது செய்தனர்.
இச்சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது, மேலும் இரு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
முதலாவது சந்தேகநபரை கைது செய்த பின்னர், ஏனைய இரு சந்தேக நபர்களுக்கும் தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களிடமுள்ள நோட்டுகளை எடுத்துக்கொண்டு வருமாறு முதலாவது சந்தேநபர் அழைப்பு விடுத்ததையடுத்து, ஏனைய இருவரும் போலி 5,000 ரூபா பெறுமதியான 30 நோட்டுகளுடன் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த போது, அச்சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.