போவை தோட்ட நிர்வாகத்தின் கொட்டத்தை அடக்கிய செந்தில் தொண்டமான்!

போவை தோட்டத்தில் கடந்த ஒருவார காலமாக நிர்வாகத்தால் தோட்டத் தொழிளாலர்களுக்கு 20 கிலோ கொழுந்தை பறிக்குமாறு கொடுக்கப்பட்டுவந்த அழுத்தங்கள் மற்றும் அரைநாள் பெயர் வழங்கப்பட்டுவந்தமைக்கு பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும், இ.தொ.காவின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமானின் தலையீட்டால் தீர்வு கிடைத்துள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நாட் சம்பளமாக 1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அப்புதளை போவை தோட்டத்தில் தோட்ட நிர்வாகத்தால் 20 கிலோ கொழுந்தை பறித்தால் மாத்திரமே நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்றும் இல்லாவிட்டால் அரை பெயர்தான் வழங்கப்படும் என்றும் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த விடயம் தொடர்பில் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு தொழிலாளர்கள் கொண்டுவந்ததையடுத்து உடனடியாக தோட்டத்துக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு நிர்வாகத்துடன் அவர் கலந்துரையாடலை நடத்தினார்.

தொழிலாளர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடுமென நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், உடனடியாக பிரச்சினைக்கு தீர்வை வழங்க வேண்டுமெனவும் அரைநாள் சம்பளம் வழங்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுநாள் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்றும் நிர்வாகத்துக்கு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்ததார்.

ஆனால் தோட்ட முகாமையாளர் கம்பனி நிர்வாகத்தினர் கூறுவதைத்தான் செய்ய முடியுமென கூறியதால் அன்று முதல் 5 கிலோ கொழுந்தைதான் தொழிலாளர்கள் பறிப்பார்கள் என்றும், சரியான தீர்வு வழங்கப்படவில்லை என்றால் போவை தோட்டத்தில் 5 கிலோ கொழுந்தை பறிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிப்பது போன்று கிளனனோர்,தம்பேத்தன,பிட்ராத்மலை, நாயபெத்த உள்ளிட்ட தோட்டங்களிலும் 5 கிலோ கொழுந்தை பறிக்கும் நிலை ஏற்படுமென செந்தில் தொண்டமான் எச்சரித்துடன் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல நேரிடும் என்றும் நிர்வாகத்திடம் திட்டவட்டமாக கூறினார்.

செந்தில் தொண்டமானின் பணிப்புரையின் பிரகாரம் போவை தோட்டத்தில் அன்று முதல்  நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் 5 கிலோ கொழுந்தையே தொழிலாளர்கள் பறித்துவந்தனர். இதனால் உடனடியாக தலையீட்டை மேற்கொண்ட தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருவதாகவும் வழமைபோன்று கொழுந்தை பறிக்குமாறும் கோரிக்கை விடுக்குமாறும் செந்தில் தொண்டமானிடம் வேண்டியது.

அத்துடன் அரைநாள் சம்பளம் வழங்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் முழுநாள் சம்பளம் வழங்கப்படும் என்றும் நிர்வாகத்தால் செந்தில் தொண்டமானுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போவை தோட்ட விவகாரத்துக்கு உடனடியாக தலையீட்டை மேற்கொண்டு தீர்வை பெற்றுக்கொடுத்துள்ள செந்தில் தொண்டமானுக்கு தோட்டத் தொழிலாளர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

செய்தி – செந்தில் தொண்டமானின் ஊடகப்பிரிவு

Related Articles

Latest Articles