வடக்கு, கிழக்கிலுள்ள காணிகளில் 40 சதவீதமானவை மகாவலி அதிகாரசபை வசம் உள்ள நிலையில், அந்த அதிகார சபையை நீக்குவதற்கு மகாநாயக்க தேரர்கள் இடமளிக்க கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒற்றையாட்சி மற்றும் படையினரை பாதுகாப்பதற்கான அமைப்பின் பிரதிநிதிகள் மகாநாயக்க தேரர்களை நேற்று முன்தினம் சந்தித்தனர்.
இதன்போது மேற்படி அமைப்பின் சார்பில் மெதகொட அபய திஸ்ஸ தேரர் மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.
‘ரணில் விக்கிரமசிங்க அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முற்பட்டபோது, அதனை செய்ய வேண்டமென மகாநாயக்க தேரர்கள் அறிவுரை வழங்கினார்கள். பின்னர் ரணில் அதனை செய்யவில்லை.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் மாகாணசபை முறைமையிலுள்ள ஒத்திசைவுப் பட்டியலை நீக்குவதற்குரிய யோசனை முன்வைக்கப்பட்டது. அதில் கைவைக்க வேண்டாமென மகாநாயக்க தேரர்கள் சங்க அறிவுரை வழங்கினார்கள். இதற்கமைய மஹிந்த செயற்பட்டார்.
தற்போது மகாவலி அதிகார சபையை இரத்து செய்வதற்குரிய முயற்சி இடம்பெற்றுவருகின்றது. எமது நாட்டில் வடக்கு, கிழக்கிலுள்ள இடங்களில் 40 சதவீதமானவை மகாவலி அதிகார சபை வசமே உள்ளது. மகாவலி அதிகார சபை கைவிடப்பட்டால் அதிகாரம் பிரதேச செயலாளர் வசம் செல்லும். அதன்பிறகு இனவாத அடிப்படையில் காணி பகிர்ந்தளிக்கப்படலாம். அது பாரதூரமான நிலைமைக்கு இடமளிக்கும்.
இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு இடமளிக்ககூடிய இப்படி பல விடயங்கள் இடம்பெறுகின்றன. இதன் பின்னணியில் வேறு நிகழ்ச்சி நிரல் இருக்கலாம். எனவே, இப்படியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.” – என்றார்.
