காணி உறுதிகள் இல்லாமல் நாட்டு மக்களுக்கு சோறு தந்த விவசாய மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே அரசாங்கத்தினால் உறுமய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சீ.டபிள்யூ.டபிள்யூ.கண்ணங்கர இலவசக் கல்வியின் ஊடாக அறிவைப் பகிர்ந்தளித்தார். தற்போதைய அரசாங்கம் அறிவோடு, உரிமையையும் பகிர்ந்தளிக்கிறது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மகாவலி வளவ வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 45,253 பேரில் 1,524 பேருக்கு, அம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் இன்று (17) நடைபெற்ற காணி உறுதி வழங்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது ஜனாதிபதியால் அடையாள ரீதியாக காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
உறுமய திட்டத்தின் காணிகளை வழங்க வேண்டியவர்களுக்கு அடுத்த இரு மாதங்களில் காணிகளை பெற்றுக்கொடுக்குமாறு பணிப்புரை விடுத்திருக்கிறேன். மாவட்டச் செயலாளர்களும், நிள அளவையியல் திணைக்கள அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு அந்தப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.
நாட்டில் 75 வருடங்களாக மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. தற்போது சட்டபூர்வமாகவே அந்த உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கிறோம். இது ஒரு வகையான புரட்சியாகும்.
நாடு என்ற வகையில் அனைவருக்கும் நெருக்கடியான காலம் உருவாகியது. அதனால் அனைவருக்கும் நட்டம் ஏற்பட்டது. இப்போது நாடு நல்ல நிலையை அடையும் வேளையில் அதன் பலன்களும் மக்களை சென்றடைய வேண்டும். குறிப்பாக நாட்டுக்கு சோறு தரும் விவசாய மக்களுக்கு அவை நிச்சயமாகக் கிடைக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு காணி உறுதிகளை வழங்கியது போலவே கொழும்பு மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்களின் வீட்டு உரிமைகள் வழங்கப்படும். அதனால் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு வீட்டு உரிமை கிடைக்கும்.
1944 களில் சீ.டபிள்யூ.டபிள்யூ. கண்ணங்கரவின் யோசனைக்கமைய அரச மந்திரிகள் சபையின் ஊடாக கல்வி அறிவைப் பகிர்ந்தளித்தோம். சுதந்திர கல்வியால் அந்த அறிவு அனைவருக்கும் பகிரப்பட்டது. தற்போதைய அரசாங்கம் அறிவோடு, உரிமையையும் பெற்றுத்தருகிறது.
உங்களால் சிறந்த விளைச்சல் கிடைக்கிறது. ஆனால் உங்களுக்கு உரிமை இருக்கவில்லை. அந்த கஷ்டங்களை 3 பரம்பரைகள் அனுபவித்திருக்கின்றன. இனியும் கஷ்டங்களைத் தரக் கூடாதென அரசாங்கம் தீர்மானித்தது. அதனால் விவசாய மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த உறுமய வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டை நாம் பொறுப்பேற்ற வேளையில் எரிபொருள், மருந்து, உணவுத் தட்டுப்பாடு காணப்பட்டது. 2022 – 2023 சிறுபோகத்தில் விளைச்சல் அதிகரித்தது. அதனால் கடவுள் செயலால் இதனைச் செய்ய முடியும் என்று நம்பினோம். விவசாயிகளே அதற்குப் பக்கலமாக நின்றனர். இப்போது விவசாயிகளுக்கான உரம் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முன்னெடுப்புக்களை ஆரம்பித்துள்ளோம்.
விவசாயிகளுக்காக நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் இத்தோடு நின்றுவிடாது. காணிகளை வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல. கிராமங்களில் வறுமையை ஒழிக்க விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். அதற்காகவே விவசாய நவீனமயப்படுத்தல் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. காணி உரிமை கிடைப்பதால் மக்கள் தமது வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியும்.
நீங்கள் அனைவரும் அந்த வேலைத்திட்டத்தின் பங்குதாரர்கள் ஆக வேண்டும். அதற்குத் தேவையான நிதி அடுத்த வருடத்திலிருந்து வழங்கப்படும். வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்திருக்கிறோம். அதனால் விவசாய சேவை நிலையங்களை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. காணி உரிமையின்றி 3 பரம்பரைகளாக சேவையாற்றிய விவசாய மக்களுக்கு நன்றி” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.