“மக்களின் மனப்பாங்கு மற்றும் அர்ப்பணிப்பிலேயே பொருளாதார வளர்ச்சியின் வேகம் தங்கியுள்ளது.”

நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு மீண்டும் ஒரு பரந்த பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் வடக்கு அபிவிருத்தி செய்யப்படும்.- ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில்  தெரிவிப்பு

நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் பொருளாதார அபிவிருத்தியின் வேகம், மக்களின் மனப்பாங்கு  மற்றும் அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

யுத்தத்திற்கு முன்னர் வடமாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த வலுவான பொருளாதாரத்தை வடக்கில் மீண்டும் ஏற்படுத்தத் தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

வடமாகாண பிரச்சினைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று (10) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக்கலந்துரையாடலில் வடமாகாண அரசியல் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள்  பலரும் கலந்துகொண்டனர்.

அங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி  மேலும் கூறியதாவது-

நல்லிணக்க வேலைத்திட்டத்தின் கீழ், அதிகூடிய அதிகாரத்தை பகிர்வது குறித்தும்  வடக்கு பிரதேசத்தின் அரசியல் விவகாரங்கள் குறித்தும்  ஆராயப்பட்டுள்ளது. பெப்ரவரி 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையிலும் உண்மைகளை தெளிவுபடுத்தியுள்ளேன். இன்று நான் அதைப் பற்றி பேசப் போவதில்லை.

பொருளாதார அபிவிருத்தியுடன் வட மாகாணத்திலும் பாரிய அபிவிருத்தி ஏற்பட வேண்டும் என நான் நம்புகிறேன். யுத்தத்தினால் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் முற்றாக அழிந்தது. எதிர்பார்க்கப்பட்ட நிலை இன்னமும் எட்டப்படவில்லை. எனவே, நாட்டை அந்த நிலைக்கு கொண்டு வருவதற்காக 10 வருடத் திட்டத்தின் கீழ் செயல்பட எதிர்பார்க்கிறோம்.

இதற்கு வெளிநாட்டு உதவிகள் மட்டுமன்றி புலம்பெயர்  அமைப்புகளின் உதவிகளையும் பெற வேண்டும்.

எனவே, இது குறித்த உங்கள் கருத்துகளை அறியவும், அபிவிருத்திப் பணிகளுக்கு உங்கள் கருத்துகளைப் பெறவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். இந்த மாகாணத்தில் புதிய பொருளாதார அபிவிருத்தியை உருவாக்குவதற்கான உங்கள் யோசனைகளை எமக்கு வழங்குங்கள்.

பயிற்செய்கையை ஆரம்பிப்பதற்காகவே உரம் வழங்குவதற்கு முன்னுரிமை அளித்தோம். எதிர்காலத்தில் ஏனைய பயிர்களுக்கும் உரங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இங்கு கருத்து தெரிவித்த பெரும்பாலானோர் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பற்றியே பேசினர். குறுகிய காலத்தில் தீர்க்கக்கூடிய பல பிரச்சினைகள் உள்ளன. எனினும், நாட்டின் தற்போதைய நிலைமையில் இந்த வருடம் அதற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வது கடினமாக இருந்தாலும் எதிர்காலத்தில் அது தொடர்பில் நாம் கவனம் செலுத்துவோம்.

இன்றைய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதாயின் ஒரு திட்டத்திற்கு அமைய செயற்படவேண்டும். வாங்கிய கடனை திரும்பச் செலுத்த வேண்டும். மேலும், எதிர்காலத்திற்காக இந்த ஆண்டு முதல் வெளிநாட்டுக் கடன்கள் பெறப்பட வேண்டும். அவற்றையும் திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும் அந்நியச் செலாவணி கையிருப்பு மேலதிகமாக இருக்க  வேண்டும்.

எனவே, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் மற்றும் போட்டித்தன்மையுள்ள பொருளாதாரம்  என்பவற்றை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்காக சில முக்கிய மாகாணங்கள் சிலவற்றை  தெரிவு செய்துள்ளோம். அதில் ஒன்று வட மாகாணம். அந்த வேலைத்திட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த வடமாகாணத்தின் பொருளாதாரம் பாரியளவில் முன்னேறி  பாரிய பொருளாதாரமாக மாறும்.

அதன்படி வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாயத்தை நவீனமயப்படுத்துவதே எமது முதல் முயற்சியாகும். கிளிநொச்சியிலிருந்து  குமண மற்றும் அங்கிருந்து உடவலவை வரை மேற்கொள்ளப்படும் நெற்பயிற்செய்கை மூலம் ஒரு ஏக்கருக்கு 06, 07 மெற்றிக் தொன்  அறுவடையைப் பெறுவது  எமது எதிர்பார்ப்பாகும். இதன் காரணமாக அப்பகுதிகளில் நெல் உற்பத்தி அதிகரிக்கும் போது ஏனைய பகுதிகளில் உள்ள காணிகள் வேறு முதலீடுகளுக்காக பயன்படுத்தப்பட முடியும்.

மேலும், மீன்பிடித் தொழிலை வணிக ரீதியாக இலாபகரமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். பாரம்பரிய மீன்பிடி தொழில் மட்டுமல்ல, இறால் வளர்ப்புக்கும் முன்னுரிமை அளித்துச் செயற்படலாம்.

இழுவை மடிவலை பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சு நடத்துவோம். அதே போன்று வடக்கு நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.

மல்வத்து ஓயா மற்றும் யோத எல ஆகியவற்றை இணைத்து, நீர்ப்பாசன திட்டம் ஒன்றை  ஆரம்பிக்கவும் ஏனைய ஆறுகளை பாதுகாக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று ஆணையிறவு கடல்நீரேரிக்கு  சுத்தமான நீரை வழங்குவதற்கும், பூனரீன் ஏரியை அபிவிருத்தி செய்வதற்கும் நாங்கள்  நடவடிக்கை எடுத்து  வருகிறோம் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

இந்த மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும்  திட்டமிடப்பட்டுள்ளது. குளங்களில் சூரியக் கலங்களைப் பொருத்தி மின்சாரம் பெறுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதோடு  பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான சாத்தியம் குறித்தும் ஆராயப்படுகிறது .

புத்தளத்திலிருந்து முல்லைத்தீவு கடற்கரை வரையான பிரதேசத்திலிருந்தும் அம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்தும்  30-40 மெகாவோர்ட்  மேலதிக மின்சாரத்தை  உற்பத்தி செய்ய முடியும். அது குறித்து ஆராய்ந்து  வருகிறோம். எதிர்காலம் பசுமை  அமோனியா மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் தான்  உள்ளது. இதில் பெரும்பாலானவை வடக்கு மாகாணத்தில் இருந்து கிடைக்கிறது. வடக்கின் பொருளாதாரத்தை முற்றாக மாற்றி பலமான பொருளாதாரமாக  உருவாக்க  முடியும்.

மேலும், மன்னாரிலிருந்து திருகோணமலை வரையிலான சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கின்றோம். சிறிய கப்பல்  இந்த தீவுகளுக்குச் செல்கின்றன. சுற்றுலாப் பயணிகள் பாரம்பரிய இந்துக் கோயில்களுக்குச் செல்கின்றனர்.

மாங்குளம் பரந்தனில் கைத்தொழில் வலயங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்து  வருகின்றமையும் குறிப்பிடதக்கது. மேலும், இந்தப் பகுதிக்கு மற்றொரு அரசு சாரா பல்கலைக்கழகத்தை  உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இப்பகுதிக்கு தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்டு வருவதன் மூலம், அறிவு சார் தொழில்நுட்ப பகுதியாக இதை மாற்ற முடியும். மேலும் பூனரினை புதிய நகரமாக மாற்றுவதே எங்கள் திட்டம். இந்த அனைத்து செயற்பாடுகளின் ஊடாகவும் வடக்கின் அபிவிருத்தியை விரைவுபடுத்துவதே எனது எதிர்பார்ப்பாகும்.

அத்துடன்  திருகோணமலை துறைமுக அபிவிருத்தி நடவடிக்கைகளை இந்தியாவின் உதவியுடன் நடைமுறைப்படுத்த வேண்டும். அது வடமாகாணத்தின் அபிவிருத்தியில் தாக்கம் செலுத்தும் விடயமாகும். யுத்தத்திற்கு  முன்னர் வடக்கு மாகாணம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கியது. அரசாங்கம் என்ற வகையில், அந்த நிலைமையை மீண்டும் ஏற்படுத்தி துரிதமாக அதனை மேம்படுத்த எதிர்பார்க்கிறோம்.

நல்லிணக்கத்தினால் மட்டும் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது. நாட்டில் வறுமை ஒழிக்கப்பட்டு இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் உருவாக்கப்பட வேண்டும். இல்லையெனில் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காது.

மேலும், இந்த மாகாணத்தில் இருந்து போதைப்பொருளை ஒழிக்க வேண்டும். கீழ் மட்டத்தில் அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து அனைவரும் இணைந்து  ஆராய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இதை அரசாங்கத்தினால் மட்டும் செய்ய முடியாது.  நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் இணைந்து பணியாற்றுமாறு  கேட்டுக்கொள்கிறேன். அதற்கு நாங்கள் ஆதரவை வழங்குவோம், அதன்படி  மக்கள் தமது பகுதிக்கான அபிவிருத்தியை பொறுப்பேற்று அரச ஆதரவுடன் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாகாணமும் தத்தமது மாகாணத்தின் அபிவிருத்திக்கு பொறுப்பேற்க வேண்டும். 09 மாகாணங்களுக்கு இடையில் போட்டி நடத்துவோம். அந்த போட்டியின் மூலம் நாடு  அபிவிருத்தி அடையும்.

 

இங்கு உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் –

வடமாகாண மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை  வடமாகாண மக்கள் சார்பாக மிகுந்த மரியாதையுடன் வரவேற்கிறேன். நாடு கடந்த காலங்களில் பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை எதிர்கொண்ட போது அதிலிருந்து நாட்டைக் காப்பாற்ற  ஜனாதிபதி முன்வந்தார். எனவே வடமாகாண மக்கள் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவது எமது பொறுப்பாகும்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வடமாகாணத்திற்கான  ஜனாதிபதியின் இணைப்புச்  செயலாளர் எம். இளங்கோவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட  பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

11-02-2023

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles