மக்கள் விரும்பும் வீட்டுத் திட்டமே மலையகத்தில் முன்னெடுக்கப்படும்!

மலையகத்தில் மாடி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இறுதியான எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டு தனி வீடுகள் கட்டப்படும் எனவும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

” சில பகுதிகளில் இடம்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, நகரை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் அங்கிருந்து செல்வதற்கு விரும்பமாட்டார்கள், அவ்வாறான இடங்களில் மாடி வீட்டுத் திட்டம் சாத்தியமா என்பது பற்றியே ஆராய்ந்துவருகின்றோம். எனினும், மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்காது.” எனவும் அவர் கூறியுள்ளார்.

ஹட்டனில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மாடி வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் ஓரங்கட்டப்பட்டுள்ள சிலரே போலியான செய்திகளை பரப்பி, தேசிய மக்கள் சக்திமீது சேறுபூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles