டித்வா புயலின் கோரத் தாக்கத்தினால் 14 பேர் உயிரிழந்த கண்டி மாவட்டம், நாவலப்பிட்டிய தொலஸ்பாகை – பரகல பிரதேசத்தில், உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நேற்று (27) உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மதத் தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம சேவகர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக மத வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து, மெழுகுவர்த்திகளை ஏந்தி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
திடீர் அனர்த்தத்தில் தங்களது உறவுகளையும் அன்புக்குரியவர்களையும் இழந்த குடும்பங்களின் துயரத்தை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், உயிரிழந்தவர்களின் நினைவாக சுமார் 2,000 உணவுப் பொதிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.










