இவ்வாண்டுக்குள் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிடக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றிலும் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோருவதற்கும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் சுதந்திரக்கட்சி பங்காளியாக இருப்பதால், கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் அது குறித்து பரீசிலிக்க வேண்டும் எனவும், தேவையான இட ஒதுக்கீடுகள் கிடைக்காத பட்சத்தில் தனி வழி செல்வதே சிறந்தது எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தலில் தனி வழி சென்றால்கூட அரசியிலிருந்து சுதந்திரக்கட்சி வெளியேறாது எனவும், மத்தியில் கூட்டணி பயணம் தொடரும் எனவும் சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
