” இவ்வளவு காலமும் இருந்த மனோ கணேசன் ஒன்றும் செய்யவில்லை. அவர் அவ்வாறு செய்யாவிட்டால் எதற்காக மீண்டும், மீண்டும் அவருக்கு வாக்களித்து ஏமாறவேண்டும்.” – என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் கேள்வி எழுப்பினார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விமல் வீரவன்சவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் கொழும்பு வர்த்தக சங்கத்துடன் நடைபெற்ற சிநேகப்பூர்வமான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு வினா எழுப்பினார்.
நாட்டுக்கு உயிரூட்டும் கொழும்பு 19 எனும் தொனிப்பொருளின்கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய முத்தையா முரளிதரன் மேலும் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் குடும்பத்தினருக்கும் எனக்குமிடையில் 20 வருடங்களாக நெருக்கமான தொடர்பு இருக்கின்றது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அவர்களே வெற்றிபெறபோகின்றனர். அவர்கள் தலைமையிலேயே ஆட்சி அமையப்போகின்றது.
நான் அரசியல்வாதி கிடையாது. அரசியலுக்கு வரவும்மாட்டேன். பணம் சம்பாதிக்கவேண்டிய தேவையும் இல்லை. ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சமுக சேவகராகவும் மரணிக்கவே விரும்புகின்றேன்.
நுவரெலியா மாவட்டத்தில் வாழும் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்குமாறும், அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி என்னிடம் கோரிக்கை விடுத்தார். அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்பதால் ஏற்கவில்லை. ஆளுநர் பதவியையும் வேண்டாம் என்றேன்.
இவ்வளவுகாலமும் இருந்த மனோ கணேசன் ஒன்றும் செய்யவில்லை. அவர் அவ்வாறு செய்யாவிட்டால் எதற்காக மீண்டும், மீண்டும் அவருக்கு வாக்களித்து ஏமாறவேண்டும்.” – என்றார்.