கஹவத்தை, ஓபாவத்தை தோட்ட, திம்புல்வல பிரிவில் தோட்டக் குடியிருப்புகள் மீது அரச மரம் முறிந்து விழுந்ததால் தோட்டக் குடியிருப்புக்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.

நேற்று மாலை பெய்த பாரிய மழைவீழ்ச்சியை தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக தோட்ட மக்கள் தமக்கு அறிவித்தையடுத்து, குறித்த பிரதேசத்திற்கு தான் விஜயம் செய்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கொடக்கவலை பிரதேச செயலாளர், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் பிராந்திய பணிப்பாளர் அனுர ஏக்கநாயக்கவிற்கும் அறிவித்துள்ளதோடு தோட்ட முகாமையாளருக்கு குறித்த மரத்தின் கிளைகளை அகற்றும்படி பணிப்புரை விடுத்துள்ளதாக ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தின் போது காயமடைந்த இளைஞர் கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை இவ்விடயம் குறித்து தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டு சென்று கூடிய விரைவில் மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதாகும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவ இடத்திற்கு கொடக்கவெல பிரதேச சபை உறுப்பினர்களான விஜய சங்கர் மற்றும் சரிந்து தர்மசேன ஆகியோரும் சமூகமளித்து இருந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் மேலும் தெரிவித்தார்.










