உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு இன்று ( 05) முதல் அறிவிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் நோபல் பரிசுக்கான போட்டி பட்டியலில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நோபல் பரிசுக்கு ஹார்வே ஜே ஆல்டர், மைக்கேல் ஹாங்டன், சார்லஸ் எம் ரைஸ் ஆகிய 3 பேரின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நோவல் வைரஸ் மற்றும் ஹெபடைட்டிஸ் சி வைரஸ் கண்டுபிடிப்புக்காக 3 பேருக்கும் இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நாளை (6 ) இயற்பியல் துறைக்கும், 7 ஆம் திகதி வேதியியல் துறைக்கும், 8ஆம் திகதி இலக்கியத்திற்கும், 9ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 10ம் திகதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.
முன்னதாக,1901ஆம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் 1969ஆம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசும் சேர்க்கப்பட்டது.
அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு என 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.