மலேசியாவில் தற்போது அவசரகாலம் அமுல்படுத்தப்பட்டு, இயல்புவாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கொரோனா நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் நெருக்கடியில் உள்ள நிலையில், மலேசியாவில் அவசரரகால நிலை அமுல்படுத்தப்பட்டு மேலும் இயல்புவாழ்க்கை மேலும் மோசமாகியுள்ளது.
இதனால், அங்கு வேலை நிமித்தம் சென்றுள்ள இலங்கையர்கள், மேற்படிப்பை முன்னெடுக்கும் இலங்கை மாணவர்கள் என ஏராளமானோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா நெருக்கடியை சமாளிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எனினும், மலேசியாவில் அரசியல் ஸ்திரமற்றுப் போயுள்ளதால் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நாடாளுமன்றம் முடக்கப்பட்டு, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் முயற்சித்த போதிலும், அதற்கான சந்தர்ப்பத்தை வழங்காது, அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி, மக்களை பகடையாக பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கொவிட் நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு நாடுகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், மலேசியாவில் மட்டும் மக்கள் மன்றமான நாடாளுமன்றத்தை முடக்குவது உலகிற்கு பிழையான முன்னுதாரமாக மலேசியா மாறியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் மீதும் நாளுக்கு நாள் அதிருப்தி ஏற்பட்டுவரும் நிலையில், தற்போது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, மக்களை இன்னமும் துன்பப்படுத்தும் முயற்சியில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், மலேசியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் தம்மை மீட்டுக் கொள்ள வேண்டும் என்றும், மலேசியாவில் இயல்பு நிலை திரும்புவதற்கு வழி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.