மலையகத்தின் கல்விப்பாரம்பரியத்தில் போற்றப்பட வேண்டியவர் வி. ரங்கன்

பல ஆண்டுகளுக்கு முன்னர் சேயோன் ரங்கன் என்ற இளைஞர் லண்டனில் என்னைச் சந்தித்தபோது, தனது தந்தையார் என்னிடம் கூறி, பெப்பீஸ் டயரியை வாங்கி அனுப்புமாறு கேட்டதாகச் சொன்னார். எனக்கு வியப்பு மேலிட்டது. அவரது தந்தை வி.ரங்கன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1964ஆம் ஆண்டு தனது கலைமாணிப் பட்டத்தை முடித்துக்கொண்டு வெளியேறியவர்.

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் லண்டனின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெப்பீஸ் டயரியை வாசிக்க ஆசைப்படும் ஒரு மனிதர் பதுளையில் இருக்கிறார் என்பது எனக்கு உண்மையில் வியப்பை அளித்தது. மேற்கத்தைய வரலாற்றைச் சிறப்புக் கற்கைநெறியாகப் பயிலும் பல்கலைக்கழக மாணவர்கள் எத்தனை பேர் பெப்பீஸ் டைரியோடு பரிச்சயம் கொண்டிருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தலையாய டைரியாக சாமுவேல் பெப்பிஸ் எழுதிவிட்டுச் சென்ற டைரி கணிக்கப்படுகிறது. 1660_- 1669 ஆண்டுவரையான லண்டன் வரலாற்றை பெப்பிஸ் மிக நேர்த்தியாக ஆவணப்படுத்தியிருக்கிறார். இரண்டாம் சார்ல்ஸ் மன்னர் முடிசூடிய வைபவம், லண்டனை உலுக்கிய பெருங் கொள்ளைநோய், லண்டனில் நிகழ்ந்த பெருந்தீவிபத்து போன்ற சரித்திர நிகழ்வுகளுக்கு பெப்பிஸ் டைரி மட்டுமே பெருஞ்சான்றாகும்.

பெப்பிஸ் டைரியைப் பற்றி விரிவான கட்டுரை ஒன்றினை எழுதுமாறும் ரங்கன் அவர்களைக் கேட்டிருந்தேன்.

சென்ற மாதம் கொழும்பில் மறைந்த வி.ரங்கன் அவர்கள் வரலாற்றை ஒரு பாடமாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். பட்டத்தை எடுத்ததும் படிப்பையே மறந்துபோகும் பட்டதாரிகள் மத்தியில், இறுதிக்காலம் வரையிலும் சீரிய வாசிப்பையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கிறார் ரங்கன். ‘வரலாற்றுத் தகவல்களை அவர் துல்லியமாக நினைவில் வைத்திருப்பார்’ என்று அவரது மகன் சேயோன் கூறுகிறார்.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளிவந்தபோது, அந்த வரலாற்றை ஆதியோடந்தமாகத் தன்னிடம் ஒப்புவித்ததை நினைவு கூர்கிறார் அவரது மகன் சேயோன்.

பதுளை தெளிவத்தை தோட்டத்தில் வைத்தி_வீராயி தம்பதிகளின் எட்டுப் பேரில் கடைசி மகனாக ஜனவரி 15, 1940 இல் பிறந்த ரங்கன், பதுளை சென். பீட்ஸ் கல்லூரியில் கற்று, பாரதி ராமசாமி அவர்கள் முயற்சியில் அமரர். வன்னியசிங்கம் அவர்களின் அனுசரணையில் யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி பெற அனுமதிக்கப்பட்ட மூவரில் ஒருவராக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் தனது எச்.எஸ்.ஸி.வகுப்பைத் தொடர்ந்தார். மலையகத்தின் குழந்தைகள் வாய்ப்புக் கிடைத்தால் கல்வியில் சாதனை படைக்கக்கூடியவர்கள்தான் என்பதனை ரங்கன் தனது பாடசாலைக்காலத்திலேயே நிரூபித்திருக்கிறார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இளம் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில், ‘மத்தியதீபம்’ (1960 ஆண்டுமலர்) மலரின் ஆசிரியராக இருந்து ரங்கன் வெளியிட்டிருக்கும் சிறப்புமலர் பிரமிப்பையளிக்கிறது.

இருபது வயது இளைஞராக யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்பில் பயின்ற ரங்கன், அவ்வாண்டில் மணிவிழாக் காணும் ந.பிச்சமூர்த்தியினைத் தனது மலரிலே சிறப்பித்த இலக்கிய மென்னுணர்வை என்னென்பது?

இலக்கிய நுண்ணாற்றல்கொண்ட ரங்கன். இலக்கிய வாசிப்பில் காட்டிய தீவிர ஈடுபாட்டை, எழுத்தியக்கத்திலும் செலுத்தாமல் போனது பெருந்துரதிர்ஷ்டம்.

பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி, பதுளை சித்தார்த்த வித்தியாலயம் என்ற தனியார் பாடசாலையில் ரங்கன் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்திலேயே அவரை நானறிவேன். பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினை மோசமாக நிலவிய காலப்பகுதியில், தனியார் பள்ளிகளிலேயே ரங்கன் ஆறு ஆண்டுகளாவது பணியாற்றியிருக்கிறார். பதுளை பாரதி கல்லூரியில் நான் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய காலப்பகுதியில், ரங்கனும் அங்கு ஆசிரியராகப் பணியாற்றினார். பழகுவதற்கு இனியவராக அவர் இருந்தார். எங்கும் அவர் தன்னை முன்நிறுத்திக் கொள்பவராக இருந்ததில்லை. வரலாறு அவருக்குப் பிடித்தமான பாடமாக இருந்தது.

பாணந்துறை கேஹெல்வத்த முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் 1970 இல் ஆசிரியராக அரச நியமனம் பெற்று, பின்னர் பதுளை சரஸ்வதி மகாவித்தியாலயத்திலும், அதனையடுத்து பசறை தமிழ் மகாவித்தியாலயத்தில் பதினொரு ஆண்டுகளும் பணிபுரிந்தார். பசறை தமிழ் மகாவித்தியாலயத்தைத் தரமுயர்த்தியதில் ரங்கன் அவர்களின் பங்கு அளப்பரியது.

பசறை பாடசாலையின் நீண்டகால ஆசிரிய அனுபவத்தின்பின், ஹாலி எல கோட்ட உதவிக்கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றினார். கோட்டக்கல்வி உயர் அதிகாரியாக இருந்த காலப்பகுதியில் கண்டிப்புமிக்க கல்வி அதிகாரியாகப் பணியாற்றியிருக்கிறார். பாடசாலை நிர்வாகத்தில் ஒழுங்கீனங்கள் நிலவுவதாகத் தெரியவந்தால் உற்றவர், தெரிந்தவர் என்று அவர் ஒருபோதும் பார்த்ததில்லை.

உயர் கல்வி அதிகாரிகளில் ரங்கன் அவர்களைப்போல நேர்மையும் அர்ப்பணிப்பும் கொண்டவர்கள் மிக அபூர்வமானவர்கள் என்றே கூறலாம். ‘தமிழ்த் தினப்போட்டிகளில் ரங்கன் அவர்கள் நடுவராக இருந்தால் முடிவுகள் உண்மையாக இருக்கும். பிள்ளைகளின் திறன்களை அளவிடுவதில் அவருக்கு அபாரமான ஆற்றல் இருந்தது.

அவரது இனிய துணையாக அமைந்த தனலட்சுமி அவர்களின் மறைவு ரங்கன் அவர்களைப்பெரிதும் பாதித்திருந்தது. மென்னுணர்வு மிகுந்த அவர் வாழ்க்கையின் சவால்களை எளிதாகவே எதிர்கொண்டிருக்கிறார்.

சேயோன், ஜனகன் என்ற இரண்டு இனிய புதல்வர்களை ரங்கன் விட்டுச் சென்றிருக்கிறார்.

மலையகத்தின் கல்விப்பாரம்பரியத்தில் வி.ரங்கன் என்றும் போற்றப்படுவார்.                                                                                                                                                  -மு.நித்தியானந்தன் – லண்டன்

Related Articles

Latest Articles