மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஹட்டன் டி.கே.டபிள்யூ. மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“மலையக மக்களுக்கு எனது தந்தையே குடியுரிமை வழங்கினார். அதன்பின்னர் வாக்குரிமையும் வழங்கப்பட்டது. ஆனால், இவற்றால் மட்டும் அம்மக்களுக்கு நிம்மதியாக வாழமுடியாது. தனக்கென காணி, வீடு அவசியம். கல்வி மற்றும் சுகாதாரத்துறைகள் மேம்படவேண்டும். இவை நடைபெற்றால் மாத்திரமே மலையக மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் என நம்பக்கூடியதாக இருக்கும்.
அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி, வருமானம் உழைக்ககூடிய வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்போதுதான் மாற்றத்தை நோக்கி பயணிக்ககூடியதாக இருக்கும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் மலையகத்துக்கு அமைச்சுப் பதவி மட்டுமல்ல பெருந்தோட்ட மக்களின் நலன்புரி, அபிவிருத்தி உட்பட இதர கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக விசேட செலயணியொன்று அமைக்கப்படும். அது பிரதம அமைச்சரின் கண்காணிப்பின்கீழ் செயற்படும். திகாம்பரம் உள்ளிட்டவர்களும் அதில் இருப்பார்கள்.” -என்றார்.