” மலையக சமூகம் இன்று வீறுநடை போடுவதற்கு தொண்டமான்களே பிரதான காரணம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு-செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு கல்வி என்பது மிக முக்கியம். மலையக கல்வி ஒரு காலகட்டத்தில் வீழ்ச்சியடைந்திருந்தது. இன்று இந்நிலைமை மாறியுள்ளது. எமது சமூகம் எல்லா துறைகளிலும் வீறுநடைபோடுகின்றது. இதற்கு கல்வியே பிரதான காரணம்.
கல்வித்துறை மேம்பாட்டுக்கான ஏற்பாகளை, வசதிகளை அரசுகளுடன் பேச்சு நடத்தி அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரே செய்துகொடுத்தனர். குறிப்பாக மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் மலையக கல்விக்கு வழங்கிய ஒத்துழைப்புகளை மறந்துவிடமுடியாது. ஆசிரியர்கள் நியமனம், உதவி ஆசிரியர்கள் நியமனம் என்பனவெல்லாம் அந்த ஆட்சியில்தான் நடந்தது.
முன்னர் மலையக மக்கள் பெருந்தோட்டத்தொழிலையே நம்பியிருந்தனர். இன்று அந்நிலைமை இல்லை. கல்வியால் நாமும் உயர்ந்துவருகின்றோம்.” – என்றார்.
