மலையக தமிழர்களின் விடுதலைக்காக தமிழரசுக் கட்சி குரல் கொடுக்கும் – மாவை

” மலையகத் தமிழர்களின் விடுதலைக்காக இலங்கை தமிழரசுக்கட்சி தொடர்ந்தும் குரல் கொடுக்கும்.” – என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் வெளிவரும் எதிரொலி பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே மாவை இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கை 1948 இல் சுதந்திரம் அடைந்ததும் 7 இலட்சம் மலையக மக்களின் குடியுரிமையை சிங்கள ஆட்சியாளர் பறித்த பொழுது அதனை எதிர்த்து அந்த மக்கள் குடியுரிமையை வலியுறுத்தித்தான் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பித்தது. அப்பொழுது அடுத்து தமிழ் மொழி உரிமைக்கும் ஆபத்து ஏற்படவுள்ளது எனத் தந்தை செல்வநாயகம் தீர்க்கதரிசனமாகக் கூறியிருந்தார். அந்த மலையக மக்கள் இலங்கைக்கு பிரித்தானியர்களால் கொண்டு வரப்பட்டவர்கள். அடிமைகளைப் போல் தேயிலை, றப்பர் தோட்டங்களில் நடத்தப்பட்டனர். அந்த மக்கள் தென்னிந்தியாவிலிருந்து மன்னாருக்குக் கொண்டுவந்து, பின்னர் மலையகப் பகுதிகளில் குடியேற்றப்பட்டு 200 ஆண்டுகளாகிவட்ட காலத்தை நினைவு கூர்ந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டாடி வருகிறார்கள். மலையகத் தமிழர்கள் பல இலட்சம் மக்கள் சிறிமாவோ -சாஸ்த்திரி உடன்படிக்கை மூலம் இந்தியா திரும்பி விட்டனர். மிகுதி மக்கள் குடியுரிமை, வாக்குரிமை பெற்று புதிய வாழ்க்கை நிலவுரிமை, வீட்டுரிமை, தொழிலுரிமையைப் பெற்று வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆனால் இப்பொழு மலையக மக்கள் 1/3 பங்கினர்தான் மலையகத்தில் வாழ்கிறார்கள் என்றவொரு செய்தியுள்ளது. மொத்தத்தில் ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களின் பலம் வீழ்ச்சியடைந்து வருகிறது.

1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானத்தை எடுத்த பொது ஜீ.ஜீ.பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம், (மலையகத்தலைவர்) சௌ.தொண்டமான் ஒன்றுபட்ட தலைமையை வழங்கியமை வரலாறாகும். இலங்கையில் மொழியால் தமிழ் பேசும் மக்களாயுள்ள தமிழர்கள் மலையக தமிழர்கள், முஸ்லிம்கள் தமிழ் பேசுமினமாக ஒரே அணியில் நின்று தமிழ் பேசும் மக்களாகத் தம்மைத் தாமே ஆளுபவர்களாக அங்கீகரித்துக் கொண்டு எதிர்கால அரசியலிலும் பொதுவாழ்விலும் சர்வதேச நடைமுறைகளிலும் செயற்படக்கூடிய தீர்மானங்களின் மீது பயணிக்க வேண்டும். மலையக மக்களின் 200 ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சிகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ” – என்றார்.

Related Articles

Latest Articles