தனது உடம்பிலுள்ள ஒரு துளி இரத்தமேனும், மலையக தமிழ் இனத்திற்காக சிந்தவும் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.
பலாங்கொடை – இராசகலை பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தனக்கு பல்வேறு தரப்பிலிருந்து உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள போதிலும், மலையக வாழ் தமிழர்களுக்காக தனது உயிரை கொடுக்கவும் தயாராகவே உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தமிழர்களினால் புறக்கணிக்கப்பட்ட பெரும்பான்மையினர் தமிழர்களின் வீடுகளுக்கு வருகைத் தந்து வாக்களிக்குமாறு கோருவோர், வெற்றி பெற்றதன் பின்னர் தமிழீனத்திற்கு நன்மை செய்வார்கள் என எவ்வாறு நம்ப முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலையக தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தன்னிடம் தமிழன் என்றதொரு இனப்பற்று இருக்கும் என ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.
எதிர்கால சந்ததியினருக்கென ஒரு வாழ்க்கை அத்தியாவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏனைய அரசியல்வாதிகளை போன்று இரத்தினபுரி வாழ் தமிழ் மக்களுக்கு தான் எந்தவொரு போலி உறுதிமொழிகளையும் வழங்க தயார் இல்லை என கூறிய அவர், பெருந்தோட்ட நிறுவனங்களின் காணிகளை தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு வழங்கப்படும் காணிகளின் ஊடாக இரத்தினபுரி தமிழர்களின் சுயத் தொழிலை ஊக்குவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, இந்த பிரசார கூட்டத்தில் அகில இலங்கை புரட்சி மக்கள் பேரவையின் தலைவர் இராஜரட்ணம்; பிரகாஷ் கருத்து வெளியிட்டார்.
இரத்தினபுரியில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யும் நோக்குடன் பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து ஆசிரியர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில்; ஈடுபட்டு வருவதாக இராஜரட்ணம்; பிரகாஷ் குற்றஞ்சுமத்தினார்.
தமிழர்களுக்கு எதிராக தமிழ் ஆசிரியர்கள் செயற்பட்டு வருவதை இரத்தினபுரி மாவட்டத்தில் காணக்கூடியதாக உள்ளதென அவர் குறிப்பிட்டார்.
பணத்திற்காக பெரும்பான்மை சமூகத்தை நோக்கி தமிழர்கள் நகரும் பட்சத்தில், எதிர்வரும் 5 வருட காலத்திற்கு அடிமைகளாகவே வாழ வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் அச்சம் வெளியிட்டார்.
இந்த நிலையில், இரத்தினபுரி தமிழர்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமென்றால், பெரும்பான்மை சமூகத்திற்கு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் இரத்தினபுரி மாவட்ட தமிழ் பாடசாலைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியே நிதியுதவிகளை வழங்கியிருந்ததாக கூறிய அவர், ஏனைய கட்சிகள் தமிழ் பாடசாலைகளை கவனிக்க மறுத்திருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.