” மலையக மக்களும் இலங்கையர்களே, எனவே, இலங்கை பிரஜையொருவருக்கு கிடைக்க வேண்டிய அத்தனை உரிமைகளும் மலையக மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். சம உரிமை பெற்ற மக்களாக எமது மக்கள் மாற வேண்டும். அதற்கான நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், பெருந்தோட்ட சமூகம் தற்போது எதிர்கொள்ளும் சமூக – பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை முன்வைத்து – விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் மனோ மேலும் கூறியவை வருமாறு,
” மலையக மக்களுக்காக இந்தியா நிதி உதவி வழங்கியுள்ளது. இதனை முன்மாதிரியாகக்கொண்டு பிரிட்டன் அரசும் தமக்கான கடமையை நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் உள்ள பதில் பிரிட்டன் தூதுவர் இந்த செய்தியை, அந்நாட்டு அரசிடம் எடுத்துரைக்க வேண்டும்.
எங்களுக்கு அனுதாபம் அல்ல. நீதி – நியாயம்தான் தேவை. இலங்கை, இந்திய, பிரிட்டன் அரசுகளுக்கும் இதை சொல்கின்றோம்.
மலையக மக்களுக்காக இந்தியா வழங்கியுள்ள 300 கோடி ரூபா மலையக கல்வி அபிவிருத்திக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இன்று காணி உரிமை பற்றி பேசப்படுகின்றது. இதனை வரவேற்கின்றோம்.
நல்லாட்சியின்போதே காணிக்கான சட்டரீதியான ஆவணம் வழங்கப்பட்டது. அன்று ஆரம்பிக்கப்பட்ட பயணம் தொடர வேண்டும்.
எமது மக்கள் தொடர்பில் மாற்றாந்தாய் மனப்பான்மை வேண்டாம், உரிமைகளை வழங்குங்கள்.
நாம் இலங்கையர்கள், இலங்கையராக இப்பிரச்சினையை தீர்க்கவே முயற்சிக்கின்றோம். எமது மக்களையும் முழு பிரஜைகளாக ஏற்பதற்கான உரிமைகள் அவசியம். அதனை வழங்குங்கள். மாறாக பிளக் டீ பிரச்சாரத்தை முன்னெடுக்கும் நிலைக்கு தள்ளிவிட வேண்டாம்.” – என்றார்.
