” மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் என பல வருடங்களாக உறுதிமொழிகள் வழங்கப்பட்டுவந்தாலும் இன்னும் சட்டப்பூர்வமாக காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை.” – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கைக்கு பெருமளவு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் மக்களே மலையக பெருந்தோட்ட மக்கள். 200 வருடங்களாக இந்நாட்டுக்காக பாடுபட்டுள்ளனர். ஆனால் நாட்டில் வறுமையால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களாக அவர்கள் இருக்கின்றனர். ஆட்சிக்குவந்த அரசுகள் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தவறிவிட்டன. அவர்களுக்கென காணி உரிமை இல்லை. லயன்களில்தான் வாழ்கின்றனர்.
இலங்கையர்கள் எனக் கூறப்பட்டாலும் தமது இருப்பிடத்தைக்குறிப்பிட மலையக பெருந்தோட்ட மக்களுக்கு இன்னும் முகவரிக்கூட இல்லை. காணி உரிமை வழங்கப்படும் என உறுதிகள் வழங்கப்பட்டுவருகின்றன. ஆனால் சட்டப்பூர்வமான உறுதி இன்னும் வழங்கப்படவில்லை. பத்திரங்கள் வழங்கப்பட்டாலும் அதன்மூலம் அவர்களின் இருப்பு உறதிப்படுத்தப்படவில்லை.
மலையக மக்களை இந்தியாவில் இருந்து வந்தவர்களாக கருதாமல், இலங்கை பிரஜைகளாகக் கருதி, அவர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் வழங்கவும்.” – என்றார்.










