மலையக மாணவர்களின் கணினி அறிவை ஸ்தம்பிதம் செய்த யட்டியாந்தோட்டை தமிழ் பாடசாலை?

யட்டியாந்தோட்டை புனித சாந்த மரியாள் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்த உதய விஞ்ஞான கூட்ட கட்டிடம், கடந்த மூன்று வருட காலமாக மூடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

இந்த விஞ்ஞான கூடம் காடுமன்றி, பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த விஞ்ஞான கூடத்தில் பல லட்சம் ரூபா பெறுமதியான கணினி உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் காணப்படுவதாகவும், அவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மஹிந்த உதய விஞ்ஞான ஆய்வு கூடம் 2015ம் ஆண்டு யட்டியாந்தோட்டை புனித சாந்த மரியாள் பாடசாலைக்கு கிடைக்கப்பெற்றது.

இந்த திட்டத்தின் மூலம் மலையக மாணவர்களுக்கு கணினி அறிவை மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட திட்டமானது, இன்று கவனீபாரற்று காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளே இந்த பாடசாலையில் அதிகமாக கல்வி பயின்று வருகின்றனர்.

நாட்டிலுள்ள பல பாடசாலைகள் உரிய வளங்கள் இன்றி மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற இந்த தருணத்தில், அனைத்து வசதிகளும் இருந்தும் அதனை உரிய வகையில் மாணவர்களுக்கு பகிரந்தளிக்க பாடசாலை நிர்வாகம் தவறியுள்ளதாக குற்றஞ்சுமத்தப்படுகின்றது.

 

 

இந்த கூடத்தில் சுமார் 60திற்கும் மேற்பட்ட கணினிகள் இருந்ததாகவும், மூன்று வருடங்களான இந்த கூடம் மூடப்பட்டுள்ளமையினால் அவை பழுதடைந்திருக்கலாம் எனவும் பழைய மாணவர்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வரை எந்;தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மலையக அரசியல்வாதிகள் இந்த விடயம் தொடர்பில் தலையீடு செய்து, மாணவர்களின் கணினி அறிவை மேம்படுத்துவதற்கு இந்த கூடத்தை மீள திறந்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நன்றி:  ட்ரூ சிலோன்

Related Articles

Latest Articles