மஸ்கெலியா பெரிய மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்தவரும், மொக்கா வின்னர்ஸ் கல்லூரியின் ஆசிரியருமான கவிஞர் கோபால் பிரேம்குமார் அவர்களின் ‘மழையும் மலையும் தேநீரோடு’ கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் மஸ்கெலியா அம்பாள் கலாச்சார மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
முன்னாள் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகமும், மலையகத்தின் பிரபல கவிஞருமான சு. முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் சிறப்புப் பிரதம அதிதியாக மனித உரிமைகள் மேம்பாட்டுக்கான சர்வதேச குரல் (IVHRD) அமைப்பின் இலங்கைக்கான தலைவரான திரு. ரகு இந்திரகுமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
விசேட அதிதியாக கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் அதிபர் மூ. மூவேந்தன் பங்கேற்றதுடன், ஹட்டன் கல்வி வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் ந. சிவகுமார், ஆசிரியர் வள நிலையத்தின் விரிவுரையாளர் கே. திவாகரன், ஆசிரியர் ஆலோசகர்களான டி. சிவகுமார், டி. தயாபரன், எஸ். ஜெயக்குமார், சட்டத்தரணி ஏ. ஹெரோசன்குமார், புரன்ஸ்வீக் பிரஜாசக்தி முகாமையாளர் ரொபின்சன் மற்றும் நற்குண அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு முகாமையாளர் எஸ். சதீஸ்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
மேலும் கம்பளை இந்துக்கல்லூரி அதிபர் ரா. பாலச்சந்திரன், மொக்கா வின்னர்ஸ் கல்லூரி அதிபர் ஜோன்சன், மின்னா தமிழ் வித்தியாலய அதிபர் உள்ளிட்ட பல கல்வியாளர்கள், கவிஞர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களும் நிகழ்வில் பங்கேற்று நூல் ஆசிரியரை பாராட்டினர்.
நிகழ்வின் சிறப்பம்சமாக மலையகக் கலாசார பாரம்பரியத்தைப் பேணிவரும் 10 நாட்டுப்புறக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். இலக்கியம், கலை மற்றும் சமூகப் பணியை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு கலந்துகொண்டோரின் பாராட்டைப் பெற்றது.










