மஸ்கெலியா பிரவுன்சிவிக் தோட்டத்தில் கடந்த வாரம் கருப்பு நிறத்திலான உடையணிந்த மூன்று நபர்கள் லயன் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து ஆறு வீடுகளில் பணம் நகை என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையிலும், இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என தோட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் இதே போன்றதொரு கொள்ளைச் சம்பவம் கடந்த வாரம் மஸ்கெலிய நயன்சா தோட்டத்திலும் பதிவாகியுள்ளதையடுத்து மக்கள் மத்தியில் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.
நேற்றுகூட மஸ்கெலிய நகரத்தில் எட்டு வர்த்தக நிறுவனங்கள் உடைக்கப்பட்டு அதில் ஒரு வர்த்தக நிலையத்தில் பணம் மற்றுமொரு வர்த்தக நிலையத்தில் மீல் நிரப்பு அட்டைகள் என்பன களவாடப்பட்டுள்ளன.
இந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கெமராக்களிள் பதிவாகியிருந்தததை காணகூடியதாக இருக்கின்றது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்ற நிலையில் இது வரைக்கும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை .
இவ்வாறான தொடர் கொள்ளைச் சம்பவங்களால் அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளது என மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் தாம் பெரும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டினர்.
எனவே இப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
( சாமிமலை ஞானராஜ்)