இலங்கையின் தேசிய செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதுடன், அதன் பொறுப்பான பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், கொழும்பு விஜேராம மாவத்தையில் செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையமொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தங்கி இருந்த அரச மாளிகையிலேயே இந்த நிலையம் அமையவுள்ளது. கடும் சட்டப்போராட்டத்துக்கு மத்தியிலேயே மேற்படி மாளிகையில் இருந்து மஹிந்த ராஜபக்ச வெளியேறினார். முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை பறிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின் பின்னரே மஹிந்த அங்கிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் நேற்று வரவு- செலவுத் திட்ட உரையின்போதே மேற்படி முன்மொழிவு தொடர்பான தகவலை ஜனாதிபதி வெளியிட்டார்.
டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துதல் மற்றும் நாட்டின் தொழில்நுட்ப ஆற்றலை மேம்படுத்துதல் தொடர்பான அரசாங்கத்தின் விரிவான வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மையம் நிறுவப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் தேசிய நிபுணத்துவத்தை உருவாக்குவதுடன், நாட்டின் பல்வேறு துறைகளிலும் இத்தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதும் இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்
