‘மஹிந்த பதவி விலக வேண்டும்’ – மகா சங்கத்தினர் இன்று தீர்மானம் நிறைவேற்றம்

சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை அமைப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மகா சங்கத்தினர் இன்று தீர்மானமொன்றை நிறைவேற்றவுள்ளனர்.

அத்துடன், இடைக்கால அரசுக்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை பெரும் நோக்கில், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களையும் மகாசங்கத்தினர், இன்று பொது மேடைக்கு அழைத்துள்ளனர்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர்,

“ புதிய பிரதமரின்கீழ் மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சரவையின்கீழ் சர்வக்கட்சி இடைக்கால அரசையே மகாநாயக்க தேரர்கள் எதிர்பார்த்தனர். தேசிய சபை ஊடாக நடவடிக்கை இடம்பெற வேண்டும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். மக்களும் இதனையே கோருகின்றனர்.

மகாசங்கத்தினர் ஆயிரம் பேர் இன்று (30)  கொழும்புக்கு வருகின்றனர். இதன்போது காத்திரமான முடிவுகள் எடுக்கப்படும். மகாசங்கத்தினரின் கோரிக்கையை ஆட்சியாளர்கள் ஏற்காவிட்டால், மகாநாயக்க தேரர்களின் ஆசியுடன் அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணிக்கும் முடிவு எடுக்கப்படும்.” – என்று குறிப்பிட்டார்.

” மகாசங்கத்தினரின் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது புதிய பிரதமரின்கீழ்தான் இடைக்கால அரசு என்ற தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன்பின்னர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் சந்திப்பொன்று இடம்பெறும். இதன்போது கட்சி தலைவர்களுக்கு மகா சங்கத்தினர் ஆலோசனை வழங்குவார்கள்.” – என்று ஓமல்பே சோபித தேரர்  அறிவித்தார்.

மகா சங்கத்தினருக்கும், கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது. சர்வக்கட்சி இடைக்கால அரசுக்கு கட்சித் தலைவர்களை ஒன்றிணைப்பதற்கான ஓர் நகர்வாகவே இது கருதப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இம்மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும்,  பங்கேற்பது குறித்து அக்கட்சி முடிவு எடுக்கவில்லை என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles