மதுஷ் படுகொலை செய்யப்பட்டதன் ஊடாக அவருடன் தொடர்படைபேணிய 80 அரசியல்வாதிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். அவர் கொல்லப்பட்டதன் நோக்கமும் இதுவாகவே இருக்கக்கூடும் ” – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“மதுஷ் கொல்லப்பட்டுள்ளார், அவரின் உயிரிழப்பு பிரச்சினை இல்லை, ஆனால் கொல்லப்பட்ட விதம்தான் பிரச்சினைக்குரிய விடயமாகும். அரசியல் வாதிகளுடன் தொடர்பிருப்பதாக ஜனவர் 28 ஆம் திகதி வானொலியொன்றின் ஊடாக மதுஷ் தகவல் வெளியிட்டிருந்தார்.
அதேபோல் மதுஷ் வழங்கிய தகவலின் பிரகாரம் 80 அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் வெளியாகியிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அதாவது போதைப்பொருள் வியாபாரிகள் நாடாளுமன்றத்திலும் இருக்கின்றனர் என்ற தகவல் மதுஷால் வெளியிடப்பட்டிருந்தது.
மதுஷ் கொல்லப்பட்டுள்ளதால் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் தொடர்பை பேணிய அரசியல்வாதிகளின் தகவல்கள் மூடப்பட்டுள்ளன. மதுஷ் விவகாரம் நீதிமன்றம் சென்றிருந்தால் அவரின் வாயாலே எல்லா விடயங்களும் வெளியாகியிருக்கும், அரசியல்வாதிகளின் பெயர்களும் தெரியவந்திருக்கும். எனவே, மதுஷை கொன்றுவிட்டு, அரசியல்வாதிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.” – என்றார் விஜித ஹேரத் எம்.பி.