” மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும்பட்சத்தில் அதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். எனினும், கட்சியே இறுதி முடிவை எடுக்கும்.” – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஆதவன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமர்களம் அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்ட ஜீவன் தொண்டமானிடம், எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” உள்ளாட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்புகளுடனும் பேச்சு நடத்தினோம். எனினும், எதிர்க்கட்சியிடம் ஒற்றுமை இல்லை. ஒற்றுமை இல்லாத அமைப்பை நம்பி இருந்தால் வேலை செய்வதற்குரிய வாய்ப்பு இல்லாமல்போகும்.
உள்ளாட்சி சபையென்பது நிர்வாக சம்பந்தப்பட்ட விடயம். அந்த நிர்வாகம் முறையாக நடந்தால்தான் மக்களுக்குரிய சேவை முறையாக சென்றடையும்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கட்சியே இறுதி முடிவை எடுக்கும். எனினும், நாம் தனித்து போட்டியிட்டால் அது நமக்கு பயனாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
ஆளுங்கட்சிமீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எதிர்க்கட்சிமீதும் நம்பிக்கை இல்லை. எனவே, நாம் எமது வழியில் பயணிப்பது சிறந்தது. எனினும், கட்சியே இறுதி முடிவை எடுக்கும்.” – எனவும் அவர் கூறினார்.