மாகாணசபை நிர்வாகம் ஆளுநர் வசம் இருப்பதற்கு மொட்டு கட்சி எதிர்ப்பு

மாகாண சபைகைளின் அதிகாரம் தொடர்ந்தும் ஆளுநர்கள் வசம் இருப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். எனினும், ஆளுநர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை எமது கட்சி சவாலுக்குட்படுத்தாது – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” மாகாணங்களுக்குரிய தமது பிரதிநிதிகளை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே இருக்கின்றது. மாகாண ஆளுநர்கள் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாகவே செயற்படுகின்றனர்.
எனினும், தற்போதைய நிலைமையானது, மாகாணசபை முறைமை உருவாக்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றவில்லை.

தமது பகுதிக்குரிய தீர்மானங்களை தமது பிரதிநிதிகள் ஊடாக மக்கள் எடுப்பதற்காகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. மாகாணசபை முறைமை செயற்பட்டாலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. அதிகாரம் முழுவதும் ஆளுநர் வசம் இருப்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடைய விடயம் அல்ல.” எனவும் சாகர காரியவசம் சுட்டிக்காட்டினார்.

” ஒரு ஆளுநரின் செயற்பாடு திருப்தி இல்லையெனில் அவரை நீக்குவதும், புதியவரை நியமிப்பதும் ஜனாதிபதிக்குரிய அதிகாரம். அது விடயத்தில் கட்சி என்ற அடிப்படையில் நாம் தலையீடுகளை மேற்கொள்ள மாட்டோம்.

அமைச்சரவை நியமன விடயத்திலும் அப்படிதான். குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கினால் நல்லமென யோசனை முன்வைத்தோமேதவிர அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை.” – எனவும் மொட்டு கட்சி செயலாளர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles