மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளது என அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவவை வருமாறு,
” மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என அரச தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தமுறைமையின்கீழ் அது நடைபெறும் என தெரியவில்லை. ஆனாலும் தேர்தலொன்று நடத்தப்படுமானால் அதனை எதிர்கொள்வதற்கு எமது கட்சி தயாராகவே இருக்கின்றது.
மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவிரும்பும் புதிய அரசியல்வாதிகள், புத்திஜீவகள் ஆகியோரிடமிருந்து இவ்வாரம் முதல் விண்ணப்பங்களை கோரவுள்ளோம்.
அத்துடன் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு , சபைக்கு வரமுடியாமல்போன தொகுதி அமைப்பாளர்களையும் தேர்தலில் களமிறங்குமாறு தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார். எனவே, பலமான அணியொன்று களமிறக்கப்படும்.
ஐக்கிய மக்கள் சக்தியை கீழ்மட்டத்தில் இருந்து கட்டியெழுப்பும் பணி 18 ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும். கூட்டணியை உருவாக்குவது பற்றியும் விரிவாக ஆராய்ந்து வருகின்றோம்.” – என்றார்.