கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதில் ஆசிய நாடுகளில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும் பாடசாலைகளில் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் இடைவிலகல், சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல் போன்ற சவால்களை தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றது என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான அரவிந்குமார் ரஷ்யாவின், கசானில் கல்வி மேம்பாட்டின் நிமித்தம் 40 நாடுகளின் பங்குபற்றலுடன் இடம்பெறும் மாநாட்டில் ” “எதிர்காலத்தை வடிவமைத்தல் ” என்ற தொனிப்பொருளிலான அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தனதுரையில் கருத்து தெரிவித்த அவர் ;
இலங்கையில் பாடசாலை கல்வி கற்கும் வயதுடைய பிள்ளைகளில் அதிகமானோர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியில் உள்ள குடும்பங்களில் உள்ளனர். இதன் காரணமாக இவர்கள் பல்வேறு குடும்ப பிரச்சினைகளை எதிர்நோக்குவதால் பாடசாலையை விட்டு தனது கற்றல் காலம் நிறைவடையும் முன்னரே மிக விரைவாக கற்றலில் இருந்து இடைவிலகும் கட்டாயத்தில் உள்ளனர்.
குறிப்பாக மாணவர் இடைவிலகலுக்கு அவர்கள் சார்ந்த நிதி நெருக்கடி முக்கிய காரணமாகிறது. இதனால் பிள்ளைகள் தொழிலுக்கு செல்ல இயல்பாகவே தூண்டப்படுகின்றனர். பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகளில் கற்றலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், கற்றல்- கற்பித்தல் உபகரணங்கள் என்பவற்றின் வளப்பகிர்வு திருப்திகரமானதாக இல்லை.
இலங்கை பல்லின சமூகங்களைக் கொண்ட நாடாக இருப்பதால் மாணவர் இடைவிலகலில் சமூக விதிமுறைகளும், சமூகங்கள் கடைபிடித்து வரும் கலாசாரங்களும் தாக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக இளவயது திருமணம், சிறுவயதிலேயே பிள்ளைகள் தமது குடும்பப் பொறுப்புகளை சுமக்கும் நிலைக்கு தள்ளப்படுதல் என்பன அதிகமாகவே காணப்படுகின்றன.
மாணவர்களின் தொடர் தேர்ச்சியான கற்றலில் ஆசிரியர் பயிற்சி, பொருத்தப்பாடான பாடத்திட்டம் என்பன கல்வியின் தரத்தை பேணுவதிலும், பாடசாலை கல்வியில் மாணவரை தக்க வைப்பதிலும் தாக்கம் செலுத்துகின்றன. பழைய கற்பித்தல் அணுகுமுறைகள், காலாவதியான பாடத்திட்டம் என்பன இதற்கு நல்ல உதாரணங்கள் ஆகும்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மாணவர்களை தொடர்ந்து கற்றலில் தக்க வைக்க இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
சிறுவர் தொழிலாளர்களை இல்லாதொழித்து அவர்கள் வாழ்வை வளப்படுத்துவதற்காக சிறுவர் நலன் பேணும் சட்ட கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், குழந்தைகள் தமது கற்றல் வயதில் தொடர்ந்தும் பாடசாலைகளில் இருப்பதை உறுதி செய்தல், சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்டங்களையும் , தண்டனைகளையும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கபட்டு வருகின்றது.
பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு நிதியுதவி வழங்கல் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தபடுவதுடன் பாடசாலை கல்வியில் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலான பண பரிமாற்ற உதவியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வியின் முக்கியத்துவம் குறித்து பெற்றோருக்கு தெளிவுபடுத்துவதோடு, சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதுவதால் ஏற்படும் சமூக பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் என்பன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கல்வியின் மேம்படுத்தப்பட்ட கொள்கை மற்றும் கொள்கை ஆளுமை என்பவற்றை அடைந்து கொள்வதற்காக, வலுவான கல்வி உட்கட்டமைப்பு, தரமான கல்வி வழங்கலுக்கான ஆசிரியர் பயிற்சி திட்டங்களில் முதலீடு செய்வதுடன் சிறுவர் தொழிலாளர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க ஆதார அடிப்படையிலான கொள்கைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொது, தனியார் கூட்டாண்மைக்கு அமைய அரச, தனியார்துறை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து கற்றலுக்கான வளங்களை மேம்படுத்துவதுடன், பொருளாதார ரீதியாக ஆபத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு உதவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர் நேயமிக்க கற்றல் சூழலை உருவாக்கி சமூகத்தில் உள்ள அனைவரும் ஏற்றத்தாழ்வின்றி சமமாக கல்வி கற்கும் சூழலை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திறன் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் நவீன பணியாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவகையில் திறன் விருத்தியை அதிகரிக்கும் தொழிநுட்ப மற்றும் தொழிற்கல்வியையும் வழங்குவதோடு, பயிற்சி (TVET) பாடத்திட்டத்தில் ஒருங்கிணைத்து நவீன உலகின் தொழிற்சந்தைக்கு மாணவர்களை தயார்படுத்தி அவர்களை கல்வியில் தக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்றிட்டங்களை திட்டமிட்ட வகையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இங்கு உள்ள பிள்ளைகள் சமத்துவமான கல்வியின் ஊடாக வளமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க முடியும். இதன் மூலம் ஒவ்வொரு குழந்தையும் வெற்றி பெற்ற பிள்ளையாக உருவாகும் என இலங்கை அரசாங்கம் நம்புவதாக குறிப்பிட்டார்.