மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதிஇப்ராஹிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை ராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவும், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவிற்கு எதிராக இரண்டு மாதங்களாக போரட்டம் நடந்து வந்தநிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பில் பேசிய அதிபர் இப்ராஹிம் பவுபக்கர், “தமது பதவியை ராஜினாமா செய்வதாகவும், தமது அதிகாரத்திற்காக மக்கள் ரத்தம் சிந்துவதை தாம் விரும்பவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனேியோ குட்டரஸ் தெரிவிக்கையில்,
“மாலியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ஐ.நா. உன்னிப்பாக கவனித்து வருகிறது. முதலில் அதிபர், இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும். அங்கு மீண்டும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.