‘மின் கட்டமைப்பில் ஏற்படும் கோளாறு காரணமாக இறப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபா இழப்பீடு’

மின்சார சபையின் மின் கட்டமைப்பில் ஏற்படும் கோளாறு மற்றும் குறைபாடுகள் காரணமாக ஏற்படும் இறப்புக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் வகையில் காப்புறுதித் திட்டமொன்றை தயாரிக்க மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் நடத்திய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

திடீர் மின் தடை காரணமாக வீட்டு உபகரணங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு இந்த காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடப்பட்டதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மின்சக்தி தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம் நேற்று (30) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக மின் தடை ஏற்படுத்தும் போது அதனை ஒரு வாரத்திற்கு முன்னர் பாவனையாளர்களுக்கு அறியப்படுத்துவதற்கான நடைமுறையொன்றை ஆரம்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

உள்ளூராட்சிமன்ற நிறுவனங்களுக்கு சொந்தமான பகுதிகளில் வீதி மின்விளக்கு வழங்கும் செயன்முறையை முறைமைப்படுத்தவும் அவ்வாறு வழங்கப்படும் வீதி விளக்குகளின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

வீதி விளக்குகளுக்கு ஒரு வருடத்துக்கு மின்சார சபையினால் இரண்டு பில்லியன் ரூபாய் நிதி செலவிடப்படுகிறது. மின்சக்தியினால் இயங்கும் வீதி விளக்குகளை பொருத்துவதற்கு முடியாத பகுதிகளில் சூரிய சக்தியால் இயங்கும் வீதி விளக்குகள் பொருத்தும் அவசியம் பற்றியும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

மின்னல் தாக்கும் பகுதிகளில் மின்னல் காரணமாக ஏற்படும் பாரிய அளவிலான சொத்து சேதங்கள் குறித்து குழு கவனம் செலுத்தியதுடன், இது தொடர்பாக இடர்முகாமைத்துவ திணைக்களத்துடன் கலந்தாலோசித்து தீர்வுகாண முடிவு செய்யப்பட்டது.

நாட்டில் சூரிய மின் கலங்களை (Solar Panel) பொருத்தும் போது உரிய பொறிமுறையொன்றை உருவாக்குதல் மற்றும் பாவனையாளர்களை அசௌகரியப்படுத்தாத முறையொன்றை உருவாக்குவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதற்காக நிலைபெறுதகு வலு அதிகாரசபை ஊடாக ஒழுங்குபடுத்தும் முறைமையொன்றை உருவாக்குவதாக சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக, அரச நிறுவனங்களுக்கு சூரிய மின் கலங்களை வழங்குவதற்கும் இந்திய கடன் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரூபாய் நிதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்மூலம் அரச நிறுவனங்களின் மின்சார கட்டணங்களுக்காக செலவு செய்யப்படும் பாரிய நிதியை படிப்படியாக குறைக்க முடியும். இதேவேளை, அரச நிறுவனங்களின் கூரைகளில் சூரிய மின் கலங்களை பொருத்துவதற்கு வாடகைக்கு வழங்குவதன் ஊடாக இலாபமீட்டும் வேலைத்திட்டமொன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதீ துஷ்மந்த, பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, சமன்பிரிய ஹேரத், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஹேமந்த சமரகோன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles