மியன்மாரில் இன்று 60 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை, மியன்மாரில் போராட்டம் தொடங்கியதில் இருந்து பதிவான ஆக அதிக எண்ணிக்கை.
ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வோர், தலையிலோ முதுகிலோ சுடப்படும் ஆபத்து அதிகம் உள்ளதாக ஏற்கெனவே ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அந்த எச்சரிக்கையையும் மீறி யங்கூன், மேண்டலே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேண்டலேயில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டதாகவும், யங்கூனில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இன்று, மியன்மாரில் ஆயுதப் படை தின அணிவகுப்பு காலை நடந்தது.
அப்போது நாட்டில் ஜனநாயகத்துக்கும், மக்களின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று ராணுவம் தெரிவித்திருந்தது.
மியன்மாரில், சென்ற மாதம் முதல் திகதி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு நாள்தோறும் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
அரசாங்க ஆலோசகரான திருவாட்டி சூச்சி (Aung San Suu Kyi) அந்நாட்டு ராணுவத்தால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
மியன்மார் நிலவரம் குறித்து உலக நாடுகளும் ஐக்கிய நாட்டு நிறுவனமும் தொடர்ந்து அக்கறை தெரிவித்து வருகின்றன.










