மியன்மாருக்கு உதவுவதற்காக ‘ஆபரேசன் பிரம்மா’ என்ற நடவடிக்கையை இந்திய மத்திய அரசு தொடங்கி உள்ளது.
இதன்படி 15 தொன் நிவாரண பொருட்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 80 வீரர்கள் சிறப்பு விமானத்தில் மியான்மருக்கு சென்றுள்ளனர்.
இந்திய ராணுவத்தின் சார்பில் மியன்மாரில் தற்காலிக மருத்துவமனை தொடங்கப்பட்டு உள்ளது.
இந்திய கடற்படையை சேர்ந்த ஐஎன்எஸ் சாவித்ரி கப்பலில் 40 தொன் நிவாரண பொருட்கள் மியன்மாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இந்தியாவை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் தாய்லாந்து, மியான்மருக்கு சென்றுள்ளனர்.
அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் மியன்மாரில் குடியேறினர். இதில் 60 சதவீதம் பேர் தமிழர்கள் ஆவர். கடந்த 1948-ம் ஆண்டில் மியன்மார் விடுதலை அடைந்தது.
கடந்த 1960-64-ம் ஆண்டுகளில் அப்போதைய ராணுவ ஆட்சியாளர்கள், தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதலை நடத்தினர். அப்போது ஏராளமானோர் இந்தியா திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழலில் தமிழர்கள் உட்பட சுமார் 25 லட்சம் இந்தியர்கள் மியான்மரில் வசிக்கின்றனர். அந்த நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர்.