மியன்மாருடனான உறவுகளை துண்டித்துக்கொண்டது நியூசிலாந்து!

நியூஸிலாந்து, மியன்மாருடனான அனைத்து அரசாங்க, அதிகாரபூர்வ உறவையும் தற்காலிகமாகத் துண்டித்துக் கொள்வதாக அந்நாட்டுப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் கூறியுள்ளார்.

மியன்மாரின் இராணுவத் தலைவர்கள் மீது பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் அந்நாட்டு இராணுவம் கடந்த வாரம் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தியதை அடுத்து, நியூஸிலாந்து இந்த முடிவுகளை எடுத்துள்ளது.

நியூஸிலாந்தின் உதவித் திட்டங்கள் எதுவும் மியன்மார் இராணுவத்துக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்காதபடி பார்த்துக் கொள்ளப்படும் என ஆர்டன் தெரிவித்தார்.

மியன்மார் நிலை குறித்து ஐ.நா மனித உரிமை பேரவை சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தவும் அவர் அழைப்பு விடுத்தார்.

2018ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், நியூஸிலாந்து மியன்மாருக்கு அளித்த உதவித் திட்டத்தின் மதிப்பு சுமார் 30 மில்லியன் டொலர் என்று அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், நியூஸிலாந்து, மியன்மாரின் இராணுவ அரசாங்கத்தை அங்கீகரிக்காது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் நானாயா மஹுடா தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்கும்படியும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles