ஐக்கிய தேசியக் கட்சி 6 மாக காலப்பகுதிக்குள் கட்டியெழுப்படும் எனவும், ஆயிரம் கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனவும் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஹரின் பெர்ணான்டோ நேற்று (10) தமது கடமையை பொறுப்பேற்றார்.
ஐதேக தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற இதற்குரிய நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கப்படும். இரு தரப்பும் இணைய வேண்டுமென கிராம மட்டத்திலான மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பார்கள் என நம்புகின்றோம்.
அவ்வாறு இல்லையேல் அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியதுபோல, ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் வருவதை தடுக்க முடியாது.”எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
இலங்கையில் முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட முதல் கட்சி என்ற நாமத்தை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி பெறும். இணையவழிமூலம் கட்சி ஆதரவாளர்கள் கட்சியுடன் தொடர்புகளை ஏற்படுத்தலாம்.” எனவும் ஹரின் பெர்ணான்டோ மேலும் குறிப்பிட்டார்.










